விஜய் குமார் மற்றும் முகம்மது ஹனிப் ஷேக்.
ஹைலைட்ஸ்
- முகம்மது ஹனீப் என்பவர் குஜராத்தில் ரூ. 3 லட்சம் வசூலித்து கொடுத்துள்ளார்
- திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியில் கோயில் கட்டப்படவுள்ளது
- நல்லிணக்கத்தை பேணும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது
Bharuch: திண்டுக்கல்லில் கோயில் கட்டுவதற்கு ரூ. 3 லட்சத்தை அப்துல்குதா முகம்மது ஹனிப் ஷேக் என்ற முஸ்லீம் வசூலித்துக் கொடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியை சேர்ந்தவர் அப்துல்குதா முகம்மது ஹனிப் ஷேக். இவர் தற்போது குஜராத் மாநிலம் பரூச்சில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், பாறைப்பட்டியில் கோயில் ஒன்று கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்காக நன்கொடை வசூலிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுதொடர்பாக பாறைப்பட்டியை சேர்ந்த, விஜய் குமார் என்பவர் 4 மாதங்களுக்கு முன்பாக ஹனிப் ஷேக்கை அணுகியுள்ளார்.
இதையடுத்து, 10 நாட்களுக்கு முன்பு குஜராத்துக்கு விஜய் குமார் செல்ல, அங்கு ஹனிப் ஷேக் மூலம் நன்கொடை வசூலிக்கும் பணிகள் நடந்தன. வாபி முதல் மெஹ்சானா நகர் வரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சிலரும், குஜராத்தைச் சேர்ந்தவர்களும் நன்கொடை அளித்துள்ளனர்.
குறிப்பிடும் வகையில், ஹனீப் ஷேக் மட்டுமே தனியாக வசூலித்து ரூ. 3 லட்சத்தை விஜய் குமாரிடம் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஹனீப் கூறும்போது, '4 மாதங்களுக்கு முன்பாக கோயில் கட்ட நிதி திரட்ட வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார்கள். 10 நாட்களுக்கு முன்பு அவர்கள் வந்தனர். வாபி முதல் மெஹ்சானா நகர் வரையில் உள்ள இடங்களில் வசூலித்தோம். நான் தனிப்பட்ட முறையில் சென்று ரூ. 3 லட்சத்தைத் திரட்டினேன்' என்றார்.
விஜய் குமார், 'குஜராத்தில் 10 நாட்கள் இருந்தேன். ஹனீபுடன் சேர்ந்து சிலரைச் சந்தித்து கோயில் கட்ட நிதி கேட்டோம். எங்கள் கிராமத்தில் யாரும் இந்துக்கள், முஸ்லிம்களாக வாழ மாட்டார்கள். எல்லோரும் நண்பர்களைப் போல வாழ்வார்கள்' என்றார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)