This Article is From Mar 11, 2019

ஏழைகளுக்கு வழங்க 3 லட்சம் ஆடைகளை சேகரித்து கின்னஸ் சாதனை செய்த இளைஞர்

ராஜஸ்தானில் ராஜ வம்சாவளியை சேர்ந்த லக்ஷ்யராஜ் சிங்கிற்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு வழங்க 3 லட்சம் ஆடைகளை சேகரித்து கின்னஸ் சாதனை செய்த இளைஞர்

120 பள்ளிகள், 15 கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரசாரத்தை லக்ஷ்யராஜ் மேற்கொண்டார்.

Udaipur:

ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக பிரசாரம் மேற்கொண்டு 3 லட்சத்திற்கு அதிகமான ஆடைகளை ராஜஸ்தானின் அரச வம்சாவளியை சேர்ந்தவர் சேகரித்துள்ளார். இந்த சம்பவம் கின்னஸ் ரிக்கார்டில் இடம்பெற்றுள்ளது. 

ராஜபுத்திர அரசரான மகாராணா பிரதாப் வம்சா வளியில் வந்தவர் லக்ஷ்யராஜ் சிங். மேவாரை சேர்ந்த லக்ஷ்யராஜ், ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக ஆடை சேகரிப்பில் ஈடுபட்டார். 

இதற்காக 120 பள்ளிகள், 15 கல்லூரிகள் மற்றும் 30 அரசு சாரா நிறுவனங்களை அணுகி உதவி கேட்டார். ''வஸ்த்திரா (ஆடைகள்) தானம்'' என்ற பெயரில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. சுமார் 76 ஆயிரம் கொடையாளர்கள் மொத்தம் 3 லட்சத்து 29 ஆயிரத்து 250 ஆடைகளை லக்ஷ்யராஜுக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில் ஆடைசேகரிப்பு சம்பவத்தை சாதனையாக ஏற்றுக் கொண்டு கின்னஸ் அமைப்பு லக்ஷ்யராஜுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. அவரது முயற்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 

இதுகுறித்து லக்ஷ்யராஜ் கூறுகையில், ''புதிய விஷயத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த பிரசாரத்தை மேற்கொண்டேன். எனக்கு பல நிறுவனங்கள் உதவி செய்தன. குறிப்பாக இளைஞர்களும், சிறுவர் சிறுமியரும் ஆடைகளை தந்து உதவினர். அவர்களால்தான் இந்த சாதனை நடந்திருக்கிறது'' என்றார். 
 

.