This Article is From Apr 21, 2020

கொரோனா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பை அரசு ரத்து செய்யவேண்டும்: ராமதாஸ்

கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டு, அவை குறித்த செய்திகளை ஊடகங்களுக்கு தெரிவிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டால், பத்திரிகையாளர்கள் களத்திற்கு வர வேண்டிய தேவை இருக்காது;

கொரோனா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பை அரசு ரத்து செய்யவேண்டும்: ராமதாஸ்

கொரோனா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பை அரசு ரத்து செய்யவேண்டும்: ராமதாஸ்

ஹைலைட்ஸ்

  • கொரோனா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பை அரசு ரத்து செய்யவேண்டும்
  • மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு வைரஸ் தொற்று
  • நான்காவது தூண்களின் பிரதிநிதிகளைக் காப்பாற்ற அரசு முன்வர வேண்டும்

கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்புகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

சென்னையில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மேலும் பல பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அவர்களுக்கும் கொரோனா வைரஸ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் ஆளாவோர் பட்டியலில் மருத்துவர்களுக்கு அடுத்தப்படியாக பத்திரிகையாளர்கள் தான் உள்ளனர். மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியிலும் கணிசமான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் அச்சம் காரணமாக அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. 

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து வகை மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், இதழாளர்கள் உள்ளிட்ட ஊடகத்துறை பணியாளர்கள், சில உணவு வழங்கும் நிறுவனங்களின் வினியோக ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் தான் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர். மேற்கண்ட அனைத்து துறையினரும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் மருத்துவத்துறை பணியாளர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் தான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் தொடங்கிய காலத்திலிருந்தே அரசியல் கட்சிகளின் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தொண்டு நிறுவன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. களத்திற்கு நேரடியாக சென்று செய்தி சேகரிக்க வேண்டிய குற்றங்கள், விபத்துகள் போன்றவையும் இப்போது நடப்பதில்லை. 

மாறாக, கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள், முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், சில நேரங்களில் காவல்துறை அதிகாரிகள்  ஆகியோரின்  செய்தியாளர் சந்திப்புகளையும், சில நேரங்களில் சிலர் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யும் உதவி வழங்கும் நிகழ்வுகளையும் பதிவு செய்து செய்தியாக்குவது தான் அவர்களின் முக்கியப் பணியாக உள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டு, அவை குறித்த செய்திகளை ஊடகங்களுக்கு தெரிவிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டால், பத்திரிகையாளர்கள் களத்திற்கு வர வேண்டிய தேவை இருக்காது; அதன் மூலம் கொரோனா ஆபத்திலிருந்து  அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். வைரஸ் தொற்றிலிருந்து நான்காவது தூண்களின் பிரதிநிதிகளைக் காப்பாற்ற அரசும், ஊடக நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

.