3 படைப் பரிவுகளையும் ஒற்றைக் குடையின் கீழ் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
New Delhi: நாட்டின் முப்படைகளின் தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ராணுவத் தளபதி பிபின் ராவத், சமீபத்தில் தேசிய அளவில் நடந்து வரும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ள ராவத், “ராணுவப் படைகள் அரசியலில் இருந்து தள்ளியிருக்கவே விரும்புகின்றன. எந்த அரசு பதவியில் இருக்கிறதோ அந்த அரசின் ஆணைப்படி நாங்கள் செயல்படுவோம்,” என்று கூறியுள்ளார். முப்படைகளின் தலைவர் என்கிற புதிய பொறுப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் 3 படைப் பரிவுகளையும் ஒற்றைக் குடையின் கீழ் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
“தலைமை என்பது தலைமை தாங்கி வழி நடத்துவது ஆகும். நீங்கள் முன்னோக்கி நகர்ந்தால், அனைவரும் முன்னோக்கி நகர்வார்கள். மக்களை சரியான பாதையில் வழிநடத்துபவர்களே தலைவர்கள். மக்களை தவறாக வழி நடத்துவோர் தலைவர் அல்ல. பல பல்கலைக்கழங்களிலும் கல்லூரிகளிலும் அதுதான் நடந்து வருகிறது. நம் நாட்டின் நகரங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட தலைவர்கள் வழிநடத்துவது சரியல்ல. அது தலைமைப் பொறுப்புக்கு அழகல்ல,” என்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சிஏஏ போராட்டத்திற்கு எதிராக அதிர்ச்சியளிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் பேசியிருந்தார் ராவத். அவரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தன.
ராவத் சொன்ன கருத்து பற்றி, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், பிரிஜேஷ் காலப்பா, “ராணுவத் தளபதி குடியுரிமைச் சட்டப் போராட்டத்துக்கு எதிராக பேசியுள்ளது சட்ட சாசனத்துக்கு எதிரானது. இன்று அரசியல் விவகாரங்கள் பற்றி பேசும் ராணுவத் தளபதி, நாளை, ராணுவப் புரட்சி செய்யவும் வாய்ப்புள்ளது,” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
“தலைமை என்பது ஒருவரின் உயரமறிந்து செயல்படுவது. நீங்கள் தலைமை வகிக்கும் அமைப்பின் மாண்பைக் காக்கும் வகையில் நடந்து கொள்வது,” என்று ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி, ராவத் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளார்.
அதேபோல காங்கிரஸின் மூத்த நிர்வாகி ப.சிதம்பரம், “ஒரு ராணுவத் தளபதி அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு அறிவுறுத்தக்கூடாது. எப்படி, அரசியல் தலைவர்கள் போரிடுவது பற்றி கருத்து சொல்ல முடியாதோ அதைப் போல. நீங்கள் உங்களின் எண்ணங்கள்படித்தான் போரில் ஈடுபடுவீர்கள். எங்களின் எண்ணத்தின் அடிப்படையில்தான் அரசியலில் ஈடுபடுவோம்,” என்று காட்டமாக கூறினார்.
ராவத், முப்படைகளின் தலைவராக நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானவுடன் காங்கிரஸின் மணிஷ் திவாரி, “தவறான பாதையில் மத்திய அரசு அடியெடுத்து வைத்துள்ளது,” என்று விமர்சித்தார்.