விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில் இந்து முன்னணியின் நிலைப்பாடு என்னவோ அதுவே பாஜகவின் நிலைப்பாடும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சிலையை பொது இடங்களில் நிறுவ தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையிலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது.
அதனால், பொது மக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசின் அறிவிப்புக்கு பாஜக, இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும், தடையை மீறி விநாயகர் சிலை நிறுவப்படும் என்றும் இந்து அமைப்புகள் தெரிவித்து வந்தன.
இதனிடையே, கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை நிறுவ அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாட்டை தமிழ்நாடு அரசு அனுமதிப்பது குறித்து, மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என மாநில பாஜக தலைவர் எல்.முருகன் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறும்போது, விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பது வருத்தம் அளிக்கிறது. மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டு முறைகளை மாநில அரசு பின்பற்றுகிறதா? இ-பாஸ் விதிகளை மத்திய அரசு தளர்த்திய நிலையில் தமிழக அரசு மட்டும் நீட்டித்துள்ளது ஏன்?
விநாயகர் சதுர்த்தியில் மட்டும் மத்திய அரசின் விதிமுறைகளை ஏன் பின்பற்ற முயற்சிக்கிறது? டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி தந்த தமிழக அரசு விநாயகர் சிலையை வைக்க அனுமதி மறுப்பது ஏன்? பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவே அனுமதி கோருகிறோம்; ஊர்வலத்திற்கு அல்ல. விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணியின் நிலைப்பாடு என்னவோ அதுவே பாஜகவின் நிலைப்பாடு என்று அவர் தெரிவித்துள்ளார்.