This Article is From Jun 12, 2018

வழக்கமான சோதனைக்காகவே வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்: ஏய்ம்ஸ் தகவல்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லியில் இருக்கும் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்

நேற்று காலை 11:30 மணி அளவில் டெல்லி ஏய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார் வாஜ்பாய்

ஹைலைட்ஸ்

  • டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வாஜ்பாய்
  • 2009 முதல் பொது வாழ்க்கையிலிருந்து விலகி இருக்கிறார் வாஜ்பாய்
  • மோடி, ராகுல் நேற்று அவரை நேரில் சந்தித்தனர்
New Delhi: இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லியில் இருக்கும் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர், வழக்கமான சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று காலை 11:30 மணி அளவில் வாஜ்பாய் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இருக்கும் விஐபி சிசிஐ பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 93 வயதாகும் வாஜ்பாய்க்கு முதலில் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று தகவல் பரவியது. இதை மருத்துவமனை நிர்வாகம் நிராகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், `முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், அவரது வழக்கமான சோதனைக்காக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு வேண்டிய சிகிச்சைகளை ஏய்ம்ஸின் மருத்துவக் குழு கவனமாக பார்த்து வருகிறது' என்று விளக்கம் அளித்தது.


பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாஜ்பாயை மருத்துவமனைக்குச் சென்று நேரில் சந்தித்தனர். இதையடுத்து பிரதமரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'முன்னாள் பிரதமர் வாஜ்பாயை டெல்லி ஏய்ம்ஸில் சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் வாஜ்பாயின் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர். மேலும், வாஜ்பாய் அவர்களின் குடும்பத்துடனும் பேசினார்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் அல்லாத மாற்று கட்சியிலிருந்து பிரதமராகி தனது முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்த ஒரே நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் வாஜ்பாய். அவர் பிரதமராக பதவியேற்று 1996 ஆம் ஆண்டு 13 நாட்களும், 1998 ஆம் ஆண்டு 13 மாதங்களும், 1999 ஆம் ஆண்டு முதல் முழு பதவி காலத்தையும் கடந்தவர். கடந்த 2009 ஆம் ஆண்டு தான் அவர் கடைசியாக பொது இடங்களில் பார்க்கப்பட்டார். அப்போது அவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். பின்னர், தனது டெல்லி வீட்டில் தான் குடும்பத்துடன் இருந்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா அளிக்கப்பட்டது. அவரின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் தேதியை `குட் கவர்னன்ஸ் நாள்'-ஆக அரசு கொண்டாடி வருகிறது.

.