This Article is From Mar 31, 2019

வசந்தகுமார் நிறுவனங்களில் சோதனையிட்டு சீல் வைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் பெயரில் இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனையிட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வசந்தகுமார் நிறுவனங்களில் சோதனையிட்டு சீல் வைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சுசீந்திரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தேர்தல் ஆணையம் நாகர்கோவிலில் இயங்கும் வசந்த்&கோ நிறுவனத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலவசமாக பொருட்கள் விநியோக்கிப்படுவதாகவும், பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. அதனால், வசந்த்&கோ குடோன், கடை ஆகியவற்றை உடனடியாக மூட வேண்டும்.

பணத்தை குவித்து வைத்து விநியோகம் செய்வார்கள், அவர்களை தடுத்தால் உடனே தோல்வி பயம் என கூறுவதா ? தமிழகத்தில் ஊரை அடித்து உலையில் போடும் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை தடுப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி, மதம் மற்றும் ஜாதிய உணர்வுகளை தூண்டும் வகையில் பொய்யான பிரச்சாரங்களை செய்து அரசியல் ஆதாயம் தேடி வருகிறது. தேர்தல் ஆணையம் இது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

.