“வரலாற்றுப் பிழை செய்து பெரும்பழிக்கு ஆளாகாதீர்கள்!”- தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!!

"தனிமைப்படுத்தலும், தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில்,  அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக்கூடாது"

“வரலாற்றுப் பிழை செய்து பெரும்பழிக்கு ஆளாகாதீர்கள்!”- தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!!

"தமிழகத்தில் நோய்த்தொற்று சமூகப் பரவலை எட்டியுள்ள நிலையில் மதுபானக்கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது"

ஹைலைட்ஸ்

  • மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்: தமிழக அரசு
  • தமிழக அரசின் அறிவிப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்
  • கொரோனா பரவலால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன

மே 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு தரப்பினரும்  தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மதுபானக் கடைகளைத் திறக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும்” என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் மேலும், “வரும் 7ஆம் தேதி முதல் மதுபானக் கடைகளைத் திறக்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. இம்முடிவு 40 நாட்களுக்கு மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தி, நோய்த்தொற்று பரவலைக் கட்டற்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் பேராபத்தாகும்.

தனிமைப்படுத்தலும், தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில்,  அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக்கூடாது. தமிழகத்தில் நோய்த்தொற்று சமூகப் பரவலை எட்டியுள்ள நிலையில் மதுபானக்கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது. 

அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்து பெரும்பழிக்கு ஆளாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, மதுபானக் கடைகளைத் திறக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.