This Article is From Mar 16, 2020

ம.பி.சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை: அவை ஒத்திவைப்பு!

Madhya Pradesh crisis: சபாநாயகரின் செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் லால்ஜி டாண்டனுக்கு எழுதிய கடிதத்தில் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

MP Govt Crisis: இந்த விவகாரம் குறித்து முதல்வர் கமல்நாத் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அமைச்சரவை கேட்டுக் கொண்டது.

ஹைலைட்ஸ்

  • ம.பி. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை
  • மார்ச்-26ம் தேதி வரை அவை ஒத்திவைப்பு!
  • கமல்நாத் அரசுக்கு 10 நாட்கள் அவகாசம் கிடைத்தது.
Bhopal:

மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் லால்ஜி டாண்டன் "அரசியலமைப்பைப் பின்பற்றுங்கள்" என்று பேரவையில் தனது தொடக்க உரையில் கூறியதையடுத்து, "சட்டப்பேரவையை மதிக்க வேண்டும்" எனக் காங்கிரஸ் கட்சியினர் எழுப்பிய முழக்கங்களுக்கு மத்தியில் சட்டமன்றத்திலிருந்து லால்ஜி வெளியேறினார். இதைத்தொடர்ந்து, மார்ச்.26ம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 

இதுதொடர்பாக ஆளுநர் லால்ஜி தனது தொடக்க உரையில் கூறும்போது, அரசியலமைப்பின் கீழ் அனைவரும் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என ஆளுநர் கமல்நாத்துக்கு அளித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்திருந்தார். 

முதல்வர் கமல்நாத் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களும் வெற்றி முகத்தோடே சட்டப்பேரவைக்குள் வருகை தந்தனர். அதேபோல், பாஜக சிவராஜ் சிங் தலைமையிலான பாஜக எம்எல்ஏக்களும் பலத்த நம்பிக்கையுடன் வருகை தந்தனர். 

இதனிடைய, நள்ளிரவில் ஆளுநர் லால்ஜியை சந்தித்து முதல்வர் கமல்நாத் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்நாத், நம்பிக்கை வாக்கெடுப்புக்குச் சபாநாயகர் அழைப்பு விடுப்பார் என்று கூறினார். கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ஜோதி ராதித்ய சிந்தியாவின் விலகலைத் தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், 15 மாதமே ஆன கமல்நாத் அரசு கவிழும் நிலையில் உள்ளது. 

இதுதொடர்பாக கமல்நாத் கூறும்போது, சட்டசபை நடவடிக்கைகள் சீராக நடைபெற வேண்டும் என ஆளுநர் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும், இதுதொடர்பாக சபாநாயகருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், சட்டசபை நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பது சபாநாயகரின் தனிச்சிறப்பு எனக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸின் இந்த கருத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் காங்கிரஸ் தயக்கம் காட்டுவதாகக் கருதப்படுகிறது. இதேபோல், ஆளுநரின் அறிவுறுத்தலுக்குச் சபாநாயகர் கட்டுப்பட்டிருப்பார் என பாஜக தரப்பு உற்சாகமாகக் கூறி வருகிறது. 

எனினும், முதல்வர் கமல்நாத் கூறும்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்குத் தேவையான பலம் தங்களிடம் இருப்பதாகக் கூறியுள்ளார். இதேபோல், சுயேட்சை எம்எல்ஏ பிரதீப் ஜெய்ஸ்வால் கூறும்போது, எங்களிடம் தேவையான பலம் உள்ளது. முதல்வரும் நம்பிக்கையுடன் இருக்கிறார். நடப்பதைக் காத்திருந்து பாருங்கள் என்று அவர் கூறியுள்ளார். 

230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் ஏற்கெனவே இரு இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். இதில், 6 பேரின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டுவிட்டார். இதனால், பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 222-ஆக குறைந்துவிட்டது.

22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதற்கு முன் காங்கிரஸில் 114 உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது அக்கட்சியின் பலம் 92-ஆக குறைந்துவிட்டது. 4 சுயேச்சை எம்எல்ஏக்கள், 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜவாதி எம்எல்ஏ என 7 உறுப்பினர்களின் ஆதரவுடன் சேர்த்து காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 99 வாக்குகள் கிடைக்கும். எதிரணியில், பாஜகவுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

.