This Article is From Jun 17, 2019

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கொல்கத்தாவில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

மருத்துவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததற்கு மம்தா பானர்ஜியே காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

New Delhi:

நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான மனு, உச்ச நீதிமன்றத்தில் நாளை அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

கொல்கத்தாவில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவாக மற்ற மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் மருத்துவ சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளன. 

மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் நடந்த போராட்டத்தின்போது முதல்வர் மம்தா பானர்ஜி மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதன்பின்னர்தான் போராட்டம் நாடு முழுவதும் தீவிரம் அடைந்தது. இந்த பிரச்னைக்கு மம்தாதான் காரணம் என்று பாஜக கூறி வருகிறது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‘மருத்துவர்கள் போராட்டத்தை கவுரவ பிரச்னையாக்காதீர்கள், மாநிலத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டசபையில் தனியாக சட்டம் இயற்றுங்கள்' என்று மம்தா பானர்ஜிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையே, நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்திட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளியன்று வழக்கு தொடரப்பட்டது. தற்போது கோடை விடுமுறை உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரும் நிலையில், வழக்கின் முக்கியத்துவம் கருதி அதனை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த நிலையில் வழக்கு நாளைக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட மத்திய உள்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

.