திமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து வைகோ விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக முதல்வராய் இருந்த மு.கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதினார். அதைத்தொடர்ந்து அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
இந்த அவதூறு வழக்கிலிருந்து வைகோவை விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், வழக்கின் மீதான தீர்ப்பு இன்று தள்ளிவைக்கபட்டது.
இந்நிலையில், நீதிபதி கருணாநிதி முன் தீர்ப்புக்கு வந்தது. அப்போது வைகோவின் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். அதைக் கூறி வைகோ தரப்பில் நேரில் ஆஜராக விலக்கு தரவேண்டும் என கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் திமுக தொடர்ந்த இந்த அவதூறு வழக்கில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி வைகோவை விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.