This Article is From Jan 31, 2019

‘இனிமேலும் பொறுமை காக்க முடியாது!’- கர்நாடக கூட்டணி பூசல் குறித்து தேவகவுடா

கர்நாடகாவில் எந்த ஒரு தனிக் கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸும் மஜத-வும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன.

‘இனிமேலும் பொறுமை காக்க முடியாது!’- கர்நாடக கூட்டணி பூசல் குறித்து தேவகவுடா

கூட்டணி அமைந்ததிலிருந்து இரு கட்சிகளுக்குள்ளும் பல்வேறு பிரச்னைகள் கிளம்பி வருகின்றன. 

Bengaluru:

கர்நாடகத்தில் கூட்டணி அரசு அமைத்திருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் காங்கிரஸுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இத்தனை நாளாக இந்த விஷயம் குறித்து அமைதி காத்து வந்த முன்னாள் பிரதமரும் மஜத கட்சியின் தலைவருமான தேவகவுடா, தனது மவுனத்தைக் கலைத்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சோமஷேகர், ‘சித்தாரமையா மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், கர்நாடகாவில் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டிருக்கும்' என்றார். இன்னொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான புட்டராங்காஷெட்டி, ‘என்னைப் பொறுத்தவரையில் சித்தராமையா மட்டும்தான் என்னுடைய முதல்வர்' என்று கூறி பிரச்னையை மேலும் பெரிதாக்கினார். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் குமாரசாமி, ‘கூட்டணி அரசுக்கான மரியாதையை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கொடுக்க மறுக்கிறார்கள். அவர்கள் எல்லையைத் தாண்டி நடந்து கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் அவர்கள் இருப்பார்கள் என்றால், நான் பதவி விலகத் தயார்' என்று உஷ்ணமானார். 

இதையடுத்து காங்கிரஸ் தரப்பிலிருந்து அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முதல்வருக்கு எதிராக கருத்து கூறிய எம்.எல்.ஏ-க்களும் மன்னிப்பு கேட்டு விட்டதாக அந்தக் கட்சி கூறியுள்ளது. இதனால், தற்போது மீண்டும் நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேவகவுடா, ‘ஒரு கூட்டணி அரசானது இப்படியா நடத்தப்பட வேண்டும். தினமும் உங்கள் கூட்டணி கூட்டாளியிடம் அவர்கள் உறுப்பினர்களை அடக்கி வையுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்க முடியாது. 6 மாதத்துக்கு முன்னர் என் மகன் முதல்வர் ஆனதிலிருந்து மிகுந்த வேதனையில் இருந்து வருகிறேன். இந்த 6 மாதத்தில் பல்வேறு விஷயங்கள் அரங்கேறியுள்ளன. அது குறித்தெல்லாம் நான் இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால், இனிமேலும் பொறுமை காக்க முடியாது' என்று வெடித்தார். 

கர்நாடகாவில் எந்த ஒரு தனிக் கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸும் மஜத-வும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. ஆனால், கூட்டணி அமைந்ததிலிருந்து இரு கட்சிகளுக்குள்ளும் பல்வேறு பிரச்னைகள் கிளம்பி வருகின்றன. 


 

.