This Article is From Oct 15, 2018

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு… அரசின் ‘அவசர காலத் திட்டம்’!

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், ‘அவசர காலத் திட்டத்துடன்’ தயாராக இருப்பதாக கூறியுள்ளது

New Delhi:

தலைநகர் டெல்லியில் குளிர் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், காற்று மாசு மீண்டும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. குளிர் காலத்தால், இரவில் 16 டிகிரி செல்ஷியஸும் பகலில் 30 டிகிரி செல்ஷியஸும் வெப்பநிலை நிலவுகிறது. காற்று மாசு அதிகரிப்பால் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் எனப்படும் ஏக்யூஐ குறியீடு, மிக மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை காலையில் ஏக்யூஐ, 201 ஆக இருந்தது. இதையடுத்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், ‘அவசர காலத் திட்டத்துடன்’ தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

தெரிந்து கொள்ள வேண்டியவை:

  1. ஒவ்வொரு ஆண்டும் இந்த காலக் கட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் சுள்ளிகள் உள்ளிட்ட அறுவடைக்குப் பின்னர் மீந்து போகும் பொருட்களை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும். நாசாவின் செயற்கைக்கோள் புகைப்படம் இந்த நிலைமையை சுட்டிக் காட்டியுள்ளது.
  2. ‘பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்திய அரசுகளிடம் காற்று மாசு நிலைமை குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன். இதற்கு முறையான நடவடிக்கை எடுக்குமாறு அவர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதுவரை எந்த அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளுக்கு இது குறித்து எந்த உதவியும் செய்து தரப்படவில்லை. இதனால், டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்கள் வாயு குடோன் போல ஆகப் போகிறது. இது மிகப் பெரிய குற்றம்’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
  3. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், ‘அவசர காலத் திட்டத்துடன்’ தயாராக இருப்பதாக கூறியுள்ளது. இதன்படி ஏக்யூஐ குறியீடு குறைவாக இருக்கும் நேரத்தில், குப்பைகளை எரிப்பது போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  4. அதேபோல ஏக்யூஐ குறியீடு மோசமாக இருக்கும் நேரத்தில், டீசல் ஜெனரேட்டர்களை நிறுத்துவது, பொதுப் போக்குவரத்தை அதிகபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  5. மேலும் ஏக்யூஐ குறியீடு மிக மோசமாக இருக்கும் நேரத்தில், கன ரக வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிப்பது, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது, கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிப்பது, சாலைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது மற்றும் அதில் நீர் தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
  6. இந்த நிலைமை குறித்து பஞ்சாபைச் சேர்ந்த கிசான் மஸ்தூர் சங்தார்ஷ் கமிட்டி என்கிற விவசாயிகள் சங்கம், ‘விவசாயிகளுக்கு சுள்ளிகளை எரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதற்காக அவர்களுக்கு அபராதம் விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் தான் காற்று மாசுவிற்கு முக்கியக் காரணம்’ என்றுள்ளது.
  7. கடந்த சில ஆண்டுகளாக டெல்லியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் காற்று மாசு மிகவும் அதிகரித்து வருகிறது.
  8. சென்ற ஆண்டு டெல்லியில் வழக்கத்தை விட காற்று மாசு 10 மடங்கு அதிகரித்தது. இதையடுத்து உலகின் மிக மாசுள்ள நகரமாக பெயரெடுத்தது டெல்லி. காற்று மாசுவில் பீஜிங்கை டெல்லி மிஞ்சியது குறிப்பிடத்தக்கது.
  9. தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதாலும், டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்ற ஆண்டு டெல்லியில் பட்டாசு விற்பனை செய்வதற்கு கட்டுப்பாடு விதித்தது உச்ச நீதிமன்றம்.
  10. சென்ற ஆண்டு தனது தீர்ப்பின் போது நீதிமன்றம், ‘டெல்லியில் இருக்கும் குழந்தைகளில் 30 சதவிகிதம் பேருக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ளது. அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் தெரிவித்திருந்தது.

.