This Article is From May 18, 2020

டெல்லி சிஏஏ வன்முறை: ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது!

ஜாமியா பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 2019 டிசம்பர் 16 ஆம் தேதி ஜாமியா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி சிஏஏ வன்முறை: ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது!

கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வன்முறையின் ஒரு பகுதி

New Delhi:

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக டெல்லி ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்போது டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷாஹீன் பாக் நகரில் உள்ள அபுல் ஃபசல் என்க்ளேவில் வசிக்கும் ஆசிப் இக்பால் தன்ஹா, இஸ்லாமிய மாணவர் அமைப்பில் உறுப்பினராகவும், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

"ஜாமியா பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 2019 டிசம்பர் 16 ஆம் தேதி ஜாமியா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெயர் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் இருந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது“ என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியாவிற்கு அருகிலுள்ள நியூ பிரண்ட்ஸ் காலணியில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இதில் நான்கு பேருந்துகள் மற்றும் இரண்டு காவல்துறை வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் காவல்துறையினர் மற்றும் மாணவர்கள் என 40 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட 24 வயதான ஆசிப் தன்ஹா பாரசீக மொழியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு மாணவராவார். மேலும், “ஜாமியா மாணவர் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினராக உள்ளார். 2019 டிசம்பரில் ஜாமியாவில் நடைபெற்ற போராட்டத்தை ஏற்பாடு செய்வதில் தீவிரமான பங்கைக் கொண்டிருந்தார். உமர் காலித், ஷர்ஜீல் இமாம், மீரன் ஹைதர் மற்றும் சபூரா சர்கர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்“ என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இம்மாதம் 31 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் என காவல்துறை கூறியுள்ளது.

.