This Article is From Feb 02, 2020

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி!

Coronavirus: சீனாவில் இருந்து திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி!

கேரளாவில் ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்ட 3 நாட்களில், அங்கு மேலும், ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சகம் கூறும்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள சீனாவுக்கு சென்று திரும்பும் அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர், சீனாவில் இருந்து திரும்பியுள்ளது தெரியவந்துள்ளது. எனினும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாவும், தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வியாழக்கிழமையன்று, கேரளாவில் ஒருவருக்கு இந்தியாவில் முதலாவதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் மருத்துவ மாணவி என்பதும், சீனாவில் அதிகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட வுஹான் பகுதியில் அவர் படித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் திரசூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கேரளாவில் வைரஸ் அறிகுறி உள்ள 800க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளிலே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் அனைவரும் கண்காணப்பிலே இருந்து வருகின்றனர். அனைத்து ஏற்பாடுகளுடனும் நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம் என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியிருந்தார். தொடர்ந்து, சீனா சென்று திரும்பியவர்கள் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அவர் அறிவறுத்தியிருந்தார். 

வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளவர்கள் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் தனி அறையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

ஜனவரி 1ம் தேதி முதல் சீனாவிற்கு சென்று திரும்பியவர்கள் தங்களது உடல்நிலையில் இருமல், காய்ச்சல், சுவாசக்கோளாறு போன்ற ஏதேனும் லேசான மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையத்தை அணுகும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களிலும், கிட்டத்தட்ட 30,000 பயணிகள் வரை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுப்பப்படுகின்றனர். 
 

.