This Article is From May 13, 2020

நிதி தொகுப்பில் இங்கிலாந்து மாடலை பின்பற்றுகிறாரா பிரதமர்!

இங்கிலாந்தில், 30 பில்லியன் பவுண்டுகள் அந்நாட்டின் சுகாதார மற்றும், தொழிலாளர் சந்தைகளின் மறு தொடக்கத்திற்கான தூண்டுதலாக அமைந்துள்ளது. அதே போல வணிகங்களை பொறுத்த அளவில், 330 பில்லியன் பவுண்டுகள் உத்தரவாதப்படுத்தப்பட்ட கடன்கள் உள்ளன.

முழு முடக்க நடவடிக்கையானது பல மாற்றங்களுடன் மீண்டும் நீட்டிக்கப்படும்(4.0) என அறிவித்திருந்தார்

New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 70 ஆயிரத்தினை கடந்துள்ள நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையானது வரும் 17-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் பிரதமர் நேற்று இரவு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியினை சமாளிக்க 20 லட்சம் கோடி நிதி தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், இதன் விவரங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்த பாணியிலான நிதி தொகுப்பானது, கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்டது. இதே பாணியில் இந்த நிதி தொகுப்பானது வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள முழு முடக்க நடவடிக்கையானது பல மாற்றங்களுடன் மீண்டும் நீட்டிக்கப்படும்(4.0) என அறிவித்திருந்தார்.

இங்கிலாந்தில், 30 பில்லியன் பவுண்டுகள் அந்நாட்டின் சுகாதார மற்றும், தொழிலாளர் சந்தைகளின் மறு தொடக்கத்திற்கான தூண்டுதலாக அமைந்துள்ளது. அதே போல வணிகங்களை பொறுத்த அளவில், 330 பில்லியன் பவுண்டுகள் அளவிலான உத்தரவாதப்படுத்தப்பட்ட கடன்கள் உள்ளன.நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு பிரதமரால் அறிவிக்கப்பட்ட இந்த நிதி தொகுப்பானது இவ்வாறாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பெரு நிறுவனங்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்கள் (MSME) ஆகியவை தங்கள் ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் இதர உதவிகளை செய்து உழைப்பு சக்தியான தொழிலாளர்களை தக்கவைத்துக்கொள்ள இந்த நிதி தொகுப்பு உதவும். இது அணைத்து துறைகளுக்கும் பயன்தரக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்த நிதி தொகுப்பானது நிலம், தொழிலாளர், பணப்புழக்கம் மற்றும் சட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்றும், சிறு குறு வணிகர்கள்(MSMEs), விவசாயிகள், புலம் பெயர் தொழிலாளர்கள், குடிசைத் தொழில் ஆகியவற்றிற்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.“ என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

 தற்போதைய நெருக்கடியில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்த ஆய்வுகளை செய்வதற்கும், அதற்கான சரியான தீர்வினை வழங்குவதற்கும் உருவாக்கப்பட்ட பணிக்குழு, அதன் தலைவராக இருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தான் அறிவித்த நிதி தொகுப்பு குறித்த விவரங்களைத் தருவார் என்று பிரதமர் கூறியுள்ளார்.

மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 1.7 லட்சம் கோடி நிதி தொகுப்பையும் உள்ளடக்கியதுதான், தற்போது அறிவிக்கப்பட உள்ள 20 லட்சம் கோடிக்கான நிதி தொகுப்பு. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்து சதவிகிதமாகும். இது "தன்னம்பிக்கை இந்தியாவிற்கு புதிய ஊக்கத்தினை அளிக்கும்” என பிரதமர் கூறியுள்ளார்.

முழு முடக்க நடவடிக்கையானது தொடங்கப்பட்டு ஏழு வாரங்கள் ஆன நிலையில் நாட்டின் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த நடவடிக்கைகள் காரணமாக அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டதால் மத்திய மாநில அரசுகளிடம் நிதி பற்றாக்குறை நிலவுகிறது.

மாநில அரசுகள் வருவாய் இல்லாமல் தவிக்கக்கூடிய நிலையில், வருவாயில் தங்களது பங்கினை பெற மத்திய அரசினை நிர்ப்பந்திக்கத் தொடங்கியுள்ளன.  முன்னதாக முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடிய போது மாநிலங்களிடமிருந்து மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் அதிகளவு அளவு முன்வைக்கப்பட்டன.

தேசிய அளவில் வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டில் வெறும் 1.5-2.8 சதவீதமாகத்தான் இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. கடந்த ஆண்டில், 4.8-5.0 சதவிகித அளவில் வளர்ச்சி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

.