This Article is From Mar 22, 2020

''ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்'' - வீடியோ வெளியிட்ட ரஜினி!!

கொரோனா பரவல் சங்கிலியை உடைத்தெறியும் விதமாக மத்திய மாநில அரசுகள் ஞாயிறன்று ஒருநாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளன.

''ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்'' - வீடியோ வெளியிட்ட ரஜினி!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறன்று நடைபெறவுள்ள ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ரஜினி கூறியிருப்பதாவது-

கொரோனா வைரஸ் பரவுதலில் இந்தியா 2-ம் நிலையில் உள்ளது. இத்தாலி கொரோனா வைரஸ் தாக்குதலில் 2-ம் நிலையில் இருந்தபோது அந்நாட்டு அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனை மக்கள் ஏற்கவில்லை. இதனால் இத்தாலியில் கடுமையான பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.

எனவே இந்தியா மூன்றாம் நிலைக்கு சென்று விடக்கூடாது. கொரோனா வைரஸ் 12 - 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே அது உயிரிழந்து விடும். எனவே ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து இந்தியா 3-ம் நிலைக்கு செல்லாமல் தடுத்து நிறுத்த வேண்டும். 

இவ்வாறு ரஜினி கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழன் அன்று இரவு 8 மணிக்கு உரையாற்றினார். அவர் தனது உரையில், '' கொரோனா அச்சுறுத்தல் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் ஆபத்தில் தள்ளியுள்ளது. கடந்த 2 மாதங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுகிற செய்தியைத்தான் பார்த்து வருகிறோம்.

தற்போது வரைக்கும் கொரோனா வைரஸை எதிர்கொண்டு, அதனை குணப்படுத்தும் மருந்து எதையும் அறிவியல் கண்டுபிடிக்கவில்லை. தடுப்பு ஊசிகளும் உருவாக்கப்படவில்லை. இத்தகைய சூழல் இயற்கையாகவே நமக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.

கடந்த 2 நாட்களை பார்க்கும்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறைந்திருக்கிறது என்றே எண்ணத் தோன்றும். ஆனால் அந்த நம்பிக்கை உண்மையல்ல. இனிமேல்தான் ஒவ்வொரு இந்தியரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

நாம் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க முடியும். ஞாயிறன்று காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மிகுந்த அவசியம் ஏற்பட்டாலே தவிர மற்ற எதற்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் '' என்று கூறினார்.

.