This Article is From Mar 19, 2020

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் CAA எதிர்ப்பு போராட்டம் நடத்திய 5 ஆயிரம் முஸ்லிம்கள்!!

கொரோனா பாதிப்பின் 2-வது நிலையில் இந்தியா உள்ளது. அதாவது உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு இன்னும் பரவாத நிலையில் இந்தியா இருக்கிறது. மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடினால், கொரோனா பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் CAA எதிர்ப்பு போராட்டம் நடத்திய 5 ஆயிரம் முஸ்லிம்கள்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைலைட்ஸ்

  • டி.என்.டி.ஜே. அமைப்பினர் சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளனர்
  • சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம்
  • கொரோனா பரவுதலை தடுக்க தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
Chennai:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்தும் சென்னையில் இன்று போராட்டம் நடத்தினர். 

கொரோனா பாதிப்பின் 2-வது நிலையில் இந்தியா உள்ளது. அதாவது உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு இன்னும் பரவாத நிலையில் இந்தியா இருக்கிறது. மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடினால், கொரோனா பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னை சேப்பாக்கம் அருகே ஒன்று கூடி தமிழக சட்டசபையை முற்றுகையிட முயன்றனர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது. 

இதேபோன்ற போராட்டத்தைத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களில் நடத்தியுள்ளனர். 

போராட்டக்காரர்கள் தாங்கி வந்த பதாகைகளில், கொரோனா வைரஸால் நாட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் குடியுரிமை சட்டத் திருத்தம் 80-க்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்துள்ளது என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 

2015-ம் ஆண்டுக்கு முன்பு ஆப்கான், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு மத ரீதியிலான அச்சுறுத்தலுக்கு ஆளாகிக் குடிபெயர்ந்த, முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை சட்டத் திருத்தம் குடியுரிமை வழங்குகிறது. இது முஸ்லிம்களுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என்று நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. 

நேற்றிரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் 33 நாட்களாக நடைபெற்று வந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டது. 

சென்னை ஷாகின்பாக் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் நாள்தோறும் சுமார் 3500 முஸ்லிம் பெண்கள் கூடி போராட்டம் நடத்தி வந்தனர். 

அவர்களிடம் கொரோனா பாதிப்பு காரணமாகப் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும்படி திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வேண்டுகோள் வைத்தனர். 

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள், ஜிம், ஓட்டல், ரிசார்ட் உள்ளிட்டவை  மார்ச் 31-ம்தேதி வரை மூடப்பட்டுள்ளது. 

இதேபோன்று மக்கள் அதிக எண்ணிக்கையில் வழிபாட்டுத் தலங்களில் கூட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்று உலகப் புகழ்பெற்ற தஞ்சையின் பெரிய கோயில் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

.