This Article is From Apr 19, 2020

ஈ-காமர்ஸ் விதிகளில் மீண்டும் மாற்றம்: அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்க அனுமதி!

முழு முடக்க நடவடிக்கை அமலில் உள்ள காலங்களில் ஈ-காமர்ஸ் நிறுவனங்களால் விற்கப்படும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஈ-காமர்ஸ் விதிகளில் மீண்டும் மாற்றம்: அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்க அனுமதி!

இந்தியாவில் லாக்டவுன் நடவடிக்கை மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையை மே 3 வரை நீட்டித்து அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஏற்கெனவே மோசமான நிலையிலிருந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது கொரோனா தொற்றால் மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு குறு உற்பத்தியாளர்கள், மற்றும் அதனை சார்ந்து இருக்கும் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 20க்கு பிறகு கொரோனா தொற்று பரவல் இல்லாத மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இது குறித்த விரிவான அறிக்கைகள் சமீபத்தில் வந்திருந்தன.

இந்த நிலையில் முழு முடக்க நடவடிக்கை அமலில் உள்ள காலங்களில் ஈ-காமர்ஸ் நிறுவனங்களால் விற்கப்படும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் (ஆயுஷ் உட்பட), விவசாயம் மற்றும் தோட்டக்கலை நடவடிக்கைகள், மீன்பிடித்தல் (கடல் மற்றும் இதர நீர் நிலைகள்), தோட்ட நடவடிக்கைகள் (தேயிலை, காபி மற்றும் ரப்பர் அதிகபட்சம் 50 சதவீத தொழிலாளர்களுடன்) மற்றும் கால்நடை வளர்ப்பு என பல துறைகளுக்கு அனுமதியளிக்கப்படுவதாக மத்திய அரசு தனது திருத்தப்பட்ட இரண்டாவது பட்டியலில் குறிப்பிட்டிருந்தது.

முந்தைய பட்டியலில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் விற்கப்படும் பள்ளி குழந்தைகளுக்கான எழுது பொருட்கள், மின்னணு கருவிகள், பொது பயன்பாட்டிற்கான குளிர்சாதன பெட்டி, மொபைல்கள், தொலைக்காட்சி பெட்டிகள், மடிக்கணினிகள், உடைகள் போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தன.

நாட்டில் முழு முடக்க நடவடிக்கைக்குப் பிறகு 40 லட்சத்திற்கும் அதிகமான வர்த்தகர்கள் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்தனர். ஆனால், மத்திய அரசு இனைய வழி வர்த்தகத்தினை நிறுத்தியது. இந்த நிலையில் தற்போது ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் ஏப்ரல் 20 முதல் அத்தியாவசியமற்ற பொருட்களை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

முழு முடக்க நடவடிக்கை காலகட்டங்களில் இனைய வர்த்தகத்தினை மத்திய அரசு நிறுத்தியது தொடர்பாக இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது. இந்த விடயத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது.

“முழு முடக்க நடவடிக்கையின் போது இனைய வர்த்தகத்தினை நிறுத்தியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இக்காலகட்டங்களில் மக்களுக்கான அத்தியாவசிய சேவை வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.” என பிரவீன் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு இந்த முழு முடக்க நடவடிக்கையை மேற்கொள்ளவில்லையெனில் சுமார் 8.2 லட்சம் மக்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று மத்திய அரசின் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

நாட்டில் இந்த பொருட்களை விநியோகிக்கப் பயன்படும் வாகனங்களுக்கான அனுமதியினை அந்தந்த மாநில அரசுகள் வழங்கும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இந்தியாவின் 2021-22 ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதிவிகிமாக இருக்கும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.