This Article is From May 05, 2020

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தில் 85% ரயில்வே மானியமாக வழங்குகிறது: பாஜக

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ''பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி கொடுக்க முடியும் உங்களால் ஏழை புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து டிக்கெட் வசூலிக்காமல் இருக்க முடியாதா?'' என ரயில்வே துறையைச் சாடியிருந்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தில் 85% ரயில்வே மானியமாக வழங்குகிறது: பாஜக

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தில் 85% ரயில்வே மானியமாக வழங்குகிறது: பாஜக. (FILE)

ஹைலைட்ஸ்

  • ரயில் கட்டணத்தில் 85% ரயில்வே மானியமாக வழங்குகிறது
  • மீதமுள்ள 15 சதவீதத்தை மாநில அரசுகள் செலுத்த வேண்டும்
  • காங்கிரஸூக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
New Delhi:

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி செல்வதற்கான ரயில் டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீத கட்டணத்தை ரயில்வே மானியமாக வழங்குகிறது மீதமுள்ள 15 சதவீதத்தை மாநில அரசுகள் செலுத்த வேண்டும் என காங்கிரஸூக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. 

முன்னதாக, பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து, அதன்மூலம், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது மாநிலங்களுக்கு திரும்பிவருகின்றனர். 

இந்த நிலையில், 40 நாள்களுக்கும் மேலாக வேலையில்லாததால் உரிய உணவின்றி தவித்த ஏழை புலம்பெயர் தொழிலாளர்களை இலவசமாக பயணிக்க அனுமதிக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி மறுத்தது. சிறப்பு ரயிலில் பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழக்கமாக உள்ள கட்டணத்தை விட கூடுதலாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி செலுத்தும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை தெரிவித்திருந்தார். 

இதேபோல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ''பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி கொடுக்க முடியும் உங்களால் ஏழை புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து டிக்கெட் வசூலிக்காமல் இருக்க முடியாதா?'' என ரயில்வே துறையைச் சாடியிருந்தார்.

காங்கிரஸின் இந்த முடிவுக்கு பாஜக, தற்போது பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி, பாஜகவின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா தனது ட்விட்டரில் கூறியதாவது, புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்லும்போது அவர்களுக்கு சிறப்பு ரயிலில் டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீதம் மானியமாக ரயில்வே வழங்குகிறது. மீதமுள்ள 15 சதவீதக் கட்டணத்தை அந்தந்த மாநில அரசுகள் செலுத்தலாம்.

மத்திய அரசின் விதிமுறைகள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கும் பொருந்தும். மத்தியப் பிரதேச அரசு இந்தக் கட்டணத்தை செலுத்துகிறது. ராகுல் காந்தி இதை காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளிடம் தெரிவித்து பின்பற்றச் சொல்ல வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் ரயிலில் 1,200 பேர் அதிகபட்சமாகப் பயணிக்கிறார்கள். அவர்கள் ரயில் நிலையத்துக்கு வந்தபின் மாநில அரசு அதிகாரிகளிடம் டிக்கெட் வழங்கப்படுகிறது. மாநில அரசுகள் டிக்கெட் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்திவிட்டால் தொழிலாளர்களிடமே வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து ரயில் கட்டணத்தை மத்திய அரசு வசூலிப்பது எவ்வளவு முட்டாள்தனம். வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் இலவசமாக மத்திய அரசு அழைத்து வருகிறது. ரயில்வே துறை கட்டணத்தை பிரதமர் கேர்ஸ் நிதியிலிருந்து ஏன் செலுத்தக்கூடாது” என்று கூறியுள்ளார். 

.