This Article is From Apr 26, 2020

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,000ஐ கடந்தது!

சர்வதேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், இந்தியாவில் 26,496 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,000ஐ கடந்தது!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசிய அளவில் கொரோனா தொற்றால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்

New Delhi:

சர்வதேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், இந்தியாவில் 26,496 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசிய அளவில் 1,990 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 49 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய அளவில் இதுவரை 824 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கிட்டதட்ட 68 சதவிகிதம் 27 மாவட்டங்களிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்கள் அதிக சுமை கொண்ட மாவட்டங்களாக (high load districts) அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதியிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொற்று பரவுகிறது. தொற்று பரவில் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்றவை குறிப்பிடத்தக்க மாநிலங்களாகும்.

தேசிய அளவில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று எண்ணிக்கையில் 13.8 சதவிகிதம் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் 47.6 சதவிகிதம் கொரோனா நோயாளிகள் மும்பையில் கண்டறியப்பட்டுள்ளனர். இதேபோல குஜராத்தில் அதிக அளவில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் கண்டறியப்பட்ட நோயாளிகளில் 62 சதவிகிதத்தினர் அகமதாபாத்திலிருந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • இந்தியா தற்போதைய ஒரு வாராக் காலகட்டத்தில் கொரோனா தொற்று பரவலில் பெரிய அளவில் முன்னேற்றத்தினை கண்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 16,000 என்கிற அளவில் இருந்த தொற்று எண்ணிக்கை இன்று 26,000 என்கிற அளவை தாண்டியுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அரசு கூறியுள்ளது.
  • இதுவரை 5,800 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த வாரம் 14.19 சதவிகிதமாக இருந்த குணமடைந்தவர்களின் அளவானது, தற்போது 21.09  சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 741 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
  • கொரோனா தொற்றால் 1,821 பேர் பாதிக்கப்பட்ட தமிழகத்தில், சென்னை, கோவை, மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நான்கு நாட்களில் அத்தியாவசிய சேவையான மருத்துவமனை மற்றும் மருந்தகங்களைத் தவிர வேறு எதுவும் திறந்திருக்காது. இதே போல திருப்பூர் மற்றும் சேலத்தில், செவ்வாய்க்கிழமை வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
  • கொரோனா தொற்றால் 7,628 பேர் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில், மும்பையில் மட்டும் கிட்டதட்ட 5,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் புதியதாக 811 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைவாழ் பகுதியான மும்பை தாராவியில் இதுவரை 240 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
  • தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை மெள்ள சரிசெய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது. குடியிருப்பு பகுதியில் உள்ள கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், வணிக வளாகங்கள், முடிதிருத்தும் கடைகள், மற்றும், மதுபானக் கடைகள் போன்றவற்றைத் திறக்க அனுமதியளிக்கவில்லை.
  • தேசிய அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 11 சதவிகிதத்தினை கொண்டிருகக்கடிய டெல்லியில், வடக்கு பகுதியில் உள்ள இந்து ராவ் மருத்துவமனையில் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அந்த மருத்துவமனையைச் சுகாதார அதிகாரிகள் சீல் வைத்தனர்.
  • ஜூன் 30 வரை மாநிலத்தில் எந்த ஒரு பொது கூட்டங்களுக்கும் அனுமதி கிடையாது என்றும், கொரோன தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இந்த உத்தரவினை அதிகாரிகள் உறுதி செய்திட வேண்டும் என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதாக முதல்வர் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமார் ட்வீட் செய்துள்ளார்.
  • கொரோனா தொற்றுக்கு எதிராக பிலாஸ்மா சிகிச்சை நல்ல பலனை கொடுத்துள்ளதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கொரோனா தொற்றுக்கு எதிராக இச்சிகிச்சையினை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளன.
  • கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றானது தற்போது சர்வதேச அளவில் 28 லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையினை கூட்டாகக் கொண்டாடுவதைத் தவிர்த்துள்ளனர்.
  • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்திருந்தாலும், அவர்கள் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படமாட்டார்கள் என உறுதியாக கூற முடியாது என்று உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் எச்சரித்துள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய முழு முடக்க நடவடிக்கை முடிந்த பிறகு, மீண்டும் ஊழியர்களை பணியில் சேர்த்துக்கொள்ள நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள முடிவுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

.