நாளை முதல் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு விமான சேவை!

“தற்போது உள்ள கொரோனா நெருக்கடி காரணமாக குறிப்பிட்ட அளவில் விமானங்களை இயக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கின்றது.” என பூரி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு விமான சேவை!

மார்ச் 23 முதல் இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • நாளை முதல் சர்வதேச விமானங்களை இயக்க அனுமதிக்கும் ஒப்பந்தம்
  • பிரான்ஸ், அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது
  • ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடனும் இதே போன்ற ஏற்பாடுகள் உள்ளது
New Delhi:

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.35 கோடியை கடந்துள்ள நிலையில் சர்வதேச அளவிலான விமான போக்குவரத்து பெரும் கட்டுப்பாடுகளுடனும், பெரும்பாலும் தடையிலும் இயங்கி வருகிறது. இந்நிலையில், நாளை முதல் சர்வதேச விமானங்களை இயக்க அனுமதிக்கும் வகையில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் இந்தியா இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தற்போது தெரிவித்துள்ளார். மேலும், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடனும் இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் பூரி தெரிவித்துள்ளார்.

“தற்போது உள்ள கொரோனா நெருக்கடி காரணமாக குறிப்பிட்ட அளவில் விமானங்களை இயக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கின்றது.” என பூரி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தற்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தங்களின்படி அமெரிக்க விமான நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே 18 விமானங்களையும், ஏர் பிரான்ஸ் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் பாரிஸ் இடையே ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 1 வரை 28 விமானங்களை இயக்கவுள்ளது.

யுனைடெட் ஏர்லைன்ஸ், டெல்லி மற்றும் நியூயார்க் இடையே தினசரி விமானமும், டெல்லி மற்றும் சான் பிரான்சிஸ்கோ இடையே வாரத்திற்கு மூன்று முறை விமானமும் பறக்க உள்ளதாக பூரி கூறியுள்ளார். மேலும், இங்கிலாந்துடன் விரைவில் இதுபோன்ற ஒப்பந்தங்களை ஏற்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், இதன் கீழ் டெல்லி மற்றும் லண்டன் இடையே ஒரு நாளைக்கு இரண்டு விமானங்கள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஜெர்மனியுடனான விமான சேவையும் விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியாவில் மார்ச் 23 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டன. கொரோனா வைரஸ் வெடிப்பை எதிர்த்து ஏறக்குறைய இரண்டு மாத இடைநீக்கத்திற்குப் பிறகு, அரசாங்கம் மே 25 அன்று திட்டமிடப்பட்ட உள்நாட்டு பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்கியது. இருப்பினும் 33 சதவிகித விமான சேவையையே விமான போக்குவரத்து துறை அனுமதித்தது. பின்னர் ஜூன் 26 ம் தேதி வரம்புகளை 33 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக உயர்த்தியது.

“இந்த ஆண்டு தீபாவளி காலகட்டத்தில் 55-60 சதவிகிதம் வரை உள்நாட்டு விமான சேவை இயங்கும்.” என சமீபத்தில் பூரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.