This Article is From Apr 27, 2020

தனக்குத் தானே புகழாரம் சூட்டிக்கொண்ட டிரம்ப்… என்ன சொன்னார் தெரியுமா?

டிரம்ப், இப்படி ஒரு பக்கம் செய்தி நிறுவனங்கள் பற்றி வசைபாடி கொண்டிருக்க, அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,57,016 ஆக அதிகரித்துள்ளது.

தனக்குத் தானே புகழாரம் சூட்டிக்கொண்ட டிரம்ப்… என்ன சொன்னார் தெரியுமா?

இதுவரை அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 54,435 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஹைலைட்ஸ்

  • உலகளவில் அமெரிக்காதான் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது
  • அமெரிக்காவில் தினம் தினம் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
  • டிரம்ப், ட்விட்டர் மூலம் தன்னைப் புகழ்ந்து கொண்டார்
Washington DC:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நாட்டின் வரலாற்றிலேயே தான்தான் மிக கடுமையாக உழைக்கும் அதிபர் என்று தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொண்டார். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப், “என்னை நன்கு அறிந்த மக்கள் மற்றும் நம் நாட்டின் வரலாறு தெரிந்த மக்கள், நான்தான் மிகக் கடுமையாக உழைக்கும் அதிபர் என்று கூறுகிறார்கள். அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நான் கடுமையான உழைப்பாளி. நான் அதிபராக பொறுப்பேற்ற முதல் மூன்றரை ஆண்டுகளில் செய்த காரியங்கள், வரலாற்றில் வேறு எந்த அதிபரும் செய்யாத விஷயங்களாகும். இதைப் போலி செய்தி நிறுவனங்கள் வெறுக்கின்றன,” என்றார். 

டிரம்ப் தொடர்ச்சியாக பல செய்தி நிறுவனங்களைப் பற்றி அவதூறாக கருத்து சொல்வதும், ‘போலி செய்தி நிறுவனங்கள்' என்று தூற்றுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். இது குறித்து அவர், “நான் அதிகாலையிலேயே எழுந்து விடுகிறேன். இரவு வெகு நேரம் வரை பணி செய்கிறேன். வெள்ளை மாளிகையை விட்டு நான் வெளியேறி பல மாதங்கள் ஆகிவிட்டன. அத்தியாவசியப் பணிகளைத் தொடங்கி வைப்பதைத் தாண்டி நான் வெளியேறுவதே கிடையாது. ஆனால், இதெல்லாம் தெரியாமல் நான் பணி செய்வது குறித்து நியூ யார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்தில் தவறான செய்தி பிரசுரிக்கப்படும்.

போலி செய்திகள் வெளியிடும் அனைத்து நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடரப்பட வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் அநீதி இழைக்கப்படுவது நிறுத்தப்படும். 

நாட்டில் உள்ள வழக்கறிஞர்களே… யாருக்காவது இதில் விருப்பம் உள்ளதா. சீக்கிரம் இது குறித்து செயலாற்றுங்கள்,” என்று விரிவாக கருத்திட்டுள்ளார். 

டிரம்ப், இப்படி ஒரு பக்கம் செய்தி நிறுவனங்கள் பற்றி வசைபாடி கொண்டிருக்க, அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,57,016 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு 54,435 பேர் உயிரிழந்துள்ளனர். 

முன்னதாக வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப், “நம் உடலின் மீது மிகவும் சக்தி வாய்ந்த ஒளி அல்லது அல்ட்ரா வயலெட் கதிர்களை காட்டினால், அது கொரோனா வைரஸை அழிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். இன்னும் அது சரிவர சோதனை செய்யப்படவில்லை என்று கூறியுள்ளீர்கள். எனவே அதை செய்து பார்த்தால் என்ன?” என்று கூறினார்.

மேலும் அவர், “அதேபோல கிருமிநாசினி, ஒரு நிமிஷத்தில் கொரோனா வைரஸை அழித்துவிடுகிறது என்று கேள்விப்பட்டேன். எனவே இந்த கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தி க்ளீன் செய்ய முடியுமா? கொரோனா வைரஸ் நுரையீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. எனவே, இந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்துள்ளது,” என்று பேசினார். அவர் எந்த கிருமிநாசினியை வைத்து இந்த நடவடிக்கையை எடுக்கலாம் என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை. 

டிரம்பின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் அவர், “அமெரிக்க ஊடகத் துறையைச் சேர்ந்த சில நிறுவனங்களின் செய்தியாளர்கள் வெள்ளை மாளிகையில் நடக்கும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மிகவும் எதிர்மறையான கேள்விகளைக் கேட்கின்றனர். இந்த செய்தியாளர்கள் சந்திப்புகள் அர்த்தமற்றவையாக மாறியுள்ளன,” என்றார். 


 

.