This Article is From May 12, 2020

ஊரடங்கு நேரத்தில் பிரதமருடன் மாநில முதல்வர்கள் முக்கிய ஆலோசனை… யார், என்ன பேசினார்கள்?

மே 17 ஆம் தேதிக்குப் பிறகு எந்த மாதிரியான நடவடிக்கை என்பதை மாநில முதல்வர்களின் ஆலோசனைக்குப் பின்னர்தான் முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் பிரதமருடன் மாநில முதல்வர்கள் முக்கிய ஆலோசனை… யார், என்ன பேசினார்கள்?

நேற்றைய கலந்துரையாடலின்போது சில மாநில முதல்வர்கள், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படலாம் என்றும் பொருளாதார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்கள்

ஹைலைட்ஸ்

  • மே 17 ஆம் தேதியுடன் இந்தியாவில் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது
  • பிரதமர் - முதல்வர்கள் சந்திப்பு சுமார் 6 மணி நேரம் நடந்தது
  • ஊரடங்கின் போது நடத்தப்பட்டும் 5வது பிரதமர் முதல்வர்கள் சந்திப்பு இது
New Delhi:

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் போடப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு, மே 17 ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு அமல் செய்ததிலிருந்து நேற்று 5வது முறையாக மாநில முதல்வர்களை வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் சந்தித்து உரையாடியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மே 17 ஆம் தேதிக்குப் பிறகு எந்த மாதிரியான நடவடிக்கை என்பதை மாநில முதல்வர்களின் ஆலோசனைக்குப் பின்னர்தான் முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நேற்றைய கலந்துரையாடலின்போது சில மாநில முதல்வர்கள், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படலாம் என்றும் பொருளாதார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்கள். ஆனால் சிலரோ, அப்படிச் செய்வது கொரோனா பரவலை அதிகப்படுத்திவிடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். 

மாநில முதல்வர்கள் என்ன பேசினார்கள்?

தமிழகம்:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஊடகச் செய்தியின் வாயிலாக மே 12 ஆம் தேதி முதல் டெல்லிக்கும் சென்னைக்கும் இடையில் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மே 31 ஆம் தேதி வரை ரயில் மற்றும் விமானப் பயணங்கள் அனுமதிக்கப்படக் கூடாது,” எனத் தெரிவித்தார். 

ஆந்திர பிரதேசம்:

ஆந்திராவின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, “விவசாய சந்தைகள் மீண்டும் திறக்கப்படுவதன் மூலம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டோர் பயனடையும் வகையில் கடன்களுக்கான வழிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்து மற்றும் மால்கள் அனைத்துவித கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட வேண்டும்,” என்று பரிந்துரை செய்தார். 

மேற்கு வங்கம்:

மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “மத்திய அரசு இந்த நோய் தொற்றுக் காலத்தை வைத்து அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இது அரசியல் செய்வதற்கான நேரமல்ல. இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பைக் குலைத்து விடாதீர்கள்,” என குற்றம் சாட்டினார். 

தெலங்கானா: 

தெலங்கானா மாநிலத்தின் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், “கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில்தான் பயணிகள் ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டிருந்தது. எனவே, இச்சமயத்தில் பயணிகள் ரயில் இயக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார். 

சத்தீஸ்கர்: 

“மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகள் சார்ந்த விஷயங்களை செய்வதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை இருக்க வேண்டும். பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களைப் பிரிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும்,” என்று முதல்வர் பூபேஷ் பாகல் கருத்து தெரிவித்தார். 

பஞ்சாப்: 

முதல்வர் அமரீந்தர் சிங், “ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு ஏற்றாற் போல பொருளாதார அறிவிப்புகள் இருக்க வேண்டும். இதன் மூலம் மாநிலங்கள் செழுமையடைந்து மக்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் மேன்மடைய வேண்டும்,” எனக் கேட்டுக் கொண்டார். 

அசாம்: 

அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனாவல், “ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட வேண்டும். அதற்குள் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கான போக்குவரத்தும் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டும்,” என்றார். 

கேரளா:

கேரளத்தின் முதல்வர் பினராயி விஜயன், “சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகள் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட வேண்டும். மெட்ரோ சேவைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும். கட்டுப்பாடு விதிமுறைகளுடன் மாநிலத்தின் பொதுப் போக்குவரத்தையும் செயல்படுத்த அனுமதி வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மீட்டெடுக்க நிதியுதவி வேண்டும்,” என்று கோரினார். 

மகாராஷ்டிரா:

அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, “கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த உஹானில் அதன் இரண்டாம் அலை உருவாகியுள்ளதாகப் படித்தேன். உலக சுகாதார அமைப்பும் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, ஊரடங்கு உத்தரவு குறித்து எந்த முடிவானாலும் அது மிகவும் கவனமாக எடுக்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார். 

கோவா:

முதல்வர் பிரமோத் சாவந்த், “மாநிலத்திற்குள் இயக்கப்படும் போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்” என்றார்.

டெல்லி:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “கன்டெயின்மென்ட் மண்டலங்களைத் தவிர மற்ற இடங்களில் பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட அனுமதியளிக்க வேண்டும். டெல்லியில் உள்ள சிவப்பு மண்டலங்களில் மேலும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

.