This Article is From May 06, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,000ஐ தாண்டியது; 1,694 பேர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 2,958 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 126 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,000ஐ தாண்டியது; 1,694 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,000ஐ தாண்டியது

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,000ஐ தாண்டியது
  • இதுவரை கொரோனா வைரஸால் 1,694 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 2,958 பேர் பாதிப்பு
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 49,391ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,694 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 2,958 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 126 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் ஆலோசனை மேற்கொண்டார். அதில், கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பு, நோயை கண்டறியும் சோதனை உள்ளிட்டவைகளில் இந்தியா எடுத்துவரும் முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா வைரஸூக்கு எதிரான 30க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் வெவ்வேறு கட்டங்களில் வளர்ச்சி நிலையிலும், சோதனையிலும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,525 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் புதிதாக 984 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, உயிரிழப்பு எண்ணிக்கையும் 617 ஆக உயிர்ந்துள்ளது. 

டெல்லியில் இதுவரை 5,104 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 508பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4,000ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, அந்த காய்கறி சந்தையே கொரோனா பாதிப்பு மையமாக உள்ளது. 

தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28.71 சதவீதமாக உள்ளது. இதுவரை
கொரோனா பாதித்த 14,183 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்த கொடிய வைரஸ் பாதிப்பின் உச்சநிலை இன்னும் வரவில்லை என்றும் அடுத்த 4 முதல் 6 வாரங்களில் இந்தியாவில் இது காணப்படலாம் என்றும், குளிர்காலத்தில் மற்றொருமுறை இதுபோல வேகமெடுக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு மாநிலங்களிலும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச்செல்கின்றனர். 

இந்தியாவில் 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, விமானப்போக்குவரத்து, ரயில், மெட்ரோ போக்குவரத்து, மாநிலத்தை தாண்டிய சாலை வழி போக்குவரத்து உள்ளிட்டவைகளுக்கு தடை நீடிக்கிறது. பள்ளி, கல்லூரி, திரையரங்குகள், வணிக வளாகங்கள், மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவைகளை திறப்பதற்கும் அனுமதியில்லை. மதம், அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி கிடையாது. 

உலகளவில், கொரோனா வைரஸால் 36,63,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2,57, 278 பேர் உயிரிழந்துள்ளனர்.

.