This Article is From May 29, 2020

இந்தியாவில் ஒரே நாளில் 7,466 பேருக்கு கொரோனா! உயிரிழப்புகளில் சீனாவை முந்தியது!!

தொடர்ந்து அதிகரித்துவரும் தொற்று எண்ணிக்கையால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 7,466 பேருக்கு கொரோனா! உயிரிழப்புகளில் சீனாவை முந்தியது!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 175 பேர் உயிரிழந்துள்ளனர்

New Delhi:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,466 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாம் காணப்பட்டுள்ளனர். இதுவரை நாளொன்றுக்கு 7,000ஐ கடக்காத கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது முதல் முறையாக 7 ஆயிரத்தினை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 89,987 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 71,105 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,706 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 175 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தியுள்ளது இந்தியா. தொடர்ந்து அதிகரித்துவரும் தொற்று எண்ணிக்கையால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 

  • புலம் பெயர் தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கு மாநில அரசுகள் ரயில் சேவையை கோரினால், ரயில்வே துறை  ரயில் சேவையை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் லாக்டவுன் அறிவித்து 60 நாட்களுக்கு பிறகு நேற்று உத்தரவிட்டுள்ளது. அதே போல புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கியுள்ள மாநிலங்களில், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய வசதிகள் கிடைக்கப்பெறுவதை மாநில அரசுகள் உறுதி செய்வதோடு, தொழிலாளர்கள் உரிய காலகட்டத்திற்குள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதையும் உறுதி செய்திட நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து மத்திய மற்றும் எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநில அரசுகளுக்கு இடையே இருந்த மோதலில் நீதிமன்றம் தலையிட்டுள்ளது.
  • கடந்த மார்ச் 25 அன்று அறிவிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையானது சமீபத்தில் நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இம்மாத இறுதியுடன் நீட்டிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கை முடிவடைய உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடலை நேற்று மேற்கொண்டிருந்தார். இதில் முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்படுவது மற்றும் விலக்கிக்கொள்ளப்படுவது குறித்து மாநிலங்களின் கருத்துக்கள் பகிரப்பட்டன. மத்திய அரசின் தொற்று தடுப்பு யுக்திகளுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், முழு முடக்க நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட 60 நாட்களின் தரவுகளை பிரதமர் அலுவலகம்  தற்போது மறு பரிசீலனை செய்து வருகிறது. 
  • அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி இந்தியா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக 1.60 லட்சம் கொரோனா நோயாளிகளை கொண்டு துருக்கி ஒன்பதாவது இடத்தில் இருந்தது. அதேபோல இந்தியா சீனாவை விட அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடாக தற்போது மாறியுள்ளது. சீனாவின் மொத்த  உயிரிழப்பு எண்ணிக்கை எண்பது 4,638 ஆக உள்ளது, இந்தியாவில் இந்த எண்ணிக்கை 4,706 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் அதிக அளவு கொரோனா தொற்று நோயாளிகளை கொண்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 60 ஆயிரத்தினை நெருங்கி வருகின்றது. இதுவரை 1,982 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில தலைநகரம் மற்றும் நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் 35 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்நகரில் 1,467 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இம்மாநிலத்தில் முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • தமிழகத்தினை பொறுத்த அளவில், நேற்று 827 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இரண்டாவது நாளாக அதிக எண்ணிக்கையை தமிழகம் பதிவு செய்துள்ளது. இதில் 559 பேர் சென்னை மற்றும் 117 பேர் பல்வேறு மாநிலங்களிலிருந்து திரும்பி வந்தவர்களாவார்கள். இந்நிலையில் இந்தியாவில் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவையடுத்து தமிழகம் உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 19,372 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டதையடுத்து சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானம் மூலம் சென்ற 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த விமானத்தில் பயணித்த 51 பேரும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
  • தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் 99 இறப்புகள் பதிவாகியுள்ளது. ஆனால் மாநில அரசு மே 26 வரை நான்கு இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. வெவ்வேறு நோய்களால் இறந்தவர்களையும் கொரோனா இறப்பு பட்டியலில் இணைக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 426 ஆக உள்ளது. ஆனால், மாநில அரசு இறந்தவர்களின் எண்ணிக்கை 316 மட்டுமே என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
  • இதற்கிடையில் ஹரியானா மாநிலம் தனது எல்லைகளை முற்றிலுமாக மூடியுள்ளது. டெல்லியுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிப்பவர்கள் தாராளமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் முன்னதாக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு கூட மாநில எல்லையில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதால், பயணிகளுக்கான விமான போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அரசு வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் 45,000 இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக மீட்டு கொண்டுவந்துள்ளது. இதுவரை மே 7 முதல் 15 வரை மற்றும் மே 16 முதல் 22 வரை இருகட்டங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூன் 13 ம் தேதி வரை மேலும் 1,00,000 பேர் மீட்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்தியா திரும்ப விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அதிக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் உலக வல்லரசு என சொல்லக்கூடிய அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நாட்டில் ஏறத்தாழ 17 லட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளும், அதைத்தொடர்ந்து இந்தியாவும் உள்ளது. தற்போது துருக்கி 10வது இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து ஈரான், பெரு, கனடா நாடுகளும் அடுத்ததாக சீனா 14 வது இடத்திலும் உள்ளது. பிரேசில் அதிக அளவில் உயிரிழப்புகளை கொண்ட நாடுகளில் முன்னணியில் உள்ளது.
  • கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதங்களில் கண்டுபிடிக்கப்படலாம் என அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் நிறுவன இயக்குநர் அந்தோனி பவுசி தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தடுப்பூசி உருவாக்கத்திற்கான அனைத்து சூழலும் சாத்தியமாக இருக்குமானால் ஜனவரியில் தடுப்பூசி கண்டு பிடிக்கப்படும் என பவுசி தெரிவித்துள்ளார்.

.