This Article is From Apr 07, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,421 ஆக உயர்வு; 114 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவையை கருத்தில் கொண்டு பிரதமர் உட்பட அனைத்து எம்.பிக்களுக்கும் ஒரு வருடத்திற்கு 30 சதவீத சம்பளம் குறைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,421 ஆக உயர்வு; 114 பேர் உயிரிழப்பு!

கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,421 ஆக உயர்வு
  • உயிரிழப்பு எண்ணிக்கை 114 ஆக அதிகரிப்பு
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 354 பேருக்கு கொரோனா பாதிப்பு
New Delhi:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 354 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளதாகவும், 114 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது தற்போதைய விகிதம்படி, தொடர்ந்தால் ஏப்.14ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு முடிவடையும் போது, 17,000 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என அரசு தகவல் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்தியாவில் 7.1 நாட்களில் மெதுவாக இரட்டிப்பாக வேண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, டெல்லியில் நடந்த மதக் கூட்டத்தால், 4.1 நாட்களில் வேகமாக இரட்டிப்பாகி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருந்தது.

கொரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்.14ம்தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்று குழுப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நிமிடமும் உலகளாவிய சூழலை கண்காணித்து வருவதாகவும், இதுதொடர்பாக சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்னும் மருந்தை ஏற்றுமதி செய்யவில்லை என்றால் இந்தியா, கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்து ஒரு வார காலம் கடந்துள்ள நிலையில் டிரம்பின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று வல்லுநர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு உட்பட அனைத்து மாநில ஆளுநர்களும் ஒரு வருடத்திற்கு 30 சதவீத சம்பள குறைப்பை மேற்கொள்ளுமாறு தாமாக முன்வந்து முடிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பிரதமர் உட்பட அனைத்து மத்திய அமைச்சர்ள் மற்றும் எம்.பிக்களுக்கும் ஒரு வருடத்திற்கு 30 சதவீத சம்பளம் குறைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதேபோல், எம்.பிக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியும் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் ரூ.7,900 கோடி சேமிக்கப்படும் என்றும், அந்த பணம் நாட்டின் ஒருங்கிணைந்த நிதிக்கு செல்லும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியாவிலே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் அதிகளவிலான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 868 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையே வைரஸ் பரவலின் முக்கிய இடமாக உள்ளது. அங்கு மட்டும் 526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் வைரஸ் தொற்றால் உயரிழந்துள்ளனர். 

இதேபோல், அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் டெல்லி 2வது இடத்தில் உள்ளது. டெல்லி புற்றுநோய் சிகிச்சை மையத்தில் 2 மருத்துவர்கள் உட்பட 18 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 12 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளனர். இதைத்தொடர்ந்து, டெல்லி மதக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 22,000 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

தப்லீக் ஜமாத்துடன் தொடர்புடையதாக தமிழ்நாடு, டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், அசாம், கர்நாடகா, அந்தமான், உத்தரகண்ட், ஹரியானா, மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுவரை சுமார் 90,000 பேருக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்தியுள்ளது. மேலும், விரைவாக சோதனை செய்யும் 5 லட்சம் ரேபிட் சோதனை கருவிகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 

.