This Article is From Jan 31, 2020

'சீனாவிலிருந்து தமிழகம் வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை' : அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவில் முதன்முறையாக கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

'சீனாவிலிருந்து தமிழகம் வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை' : அமைச்சர் விஜயபாஸ்கர்

டெல்லி அருகே பிரமாண்ட அளவில் கொரோனா வைரஸ் சிகிச்சை முகாம் இந்திய ராணுவம் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து தமிழகம் வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்றும், இதுகுறித்து தமிழக மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

இன்றுடன் 242 பேர் சீனாவிலிருந்து தமிழகம் வந்திருக்கின்றனர். அவர்களுடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடி தொடர்பில் இருக்கிறார்கள். 242 பேரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. தமிழக மக்கள் இதுகுறித்து அச்சமோ, பதட்டமோ அடையத் தேவையில்லை.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவம் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. 

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் மாணவர்களை தனி இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்க டெல்லி அருகேயுள்ள மானேசரில் ராணுவம் தரப்பில் பிரமாண்ட மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து சுமார் 300 மாணவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை 2 வாரத்திற்கு தங்க வைத்து, நிலைமை கண்காணிக்கப்படும். இதற்காக தனி மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

 வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உலக அளவிலும் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்வதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 

.