This Article is From Apr 28, 2020

கொரோனா எதிரொலி: கோயம்பேடு சந்தையில் 600 மொத்த விற்பனை கடைகள் மட்டுமே இயங்க அனுமதி!

மாநகராட்சியின் முடிவை மொத்த வியாபாரிகள் ஏற்றுக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி நிபந்தனையை ஏற்க சிறு வியாபாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா எதிரொலி: கோயம்பேடு சந்தையில் 600 மொத்த விற்பனை கடைகள் மட்டுமே இயங்க அனுமதி!

கொரோனா எதிரொலி: கோயம்பேடு சந்தையில் 600 மொத்த விற்பனை கடைகள் மட்டுமே இயங்க அனுமதி!

ஹைலைட்ஸ்

  • மொத்த விற்பனை கடைகளில் 600 கடைகள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி
  • அமைந்தகரையில் 450 சில்லறை விற்பனை கடைகளை அமைத்துக் கொள்ள அனுமதி
  • கோயம்பேட்டில் உள்ள 1500 சில்லறை விற்பனை கடைகளும் அடைக்கப்படும்

சென்னை கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அங்கு மொத்தமுள்ள 1,900 மொத்த விற்பனை கடைகளில் 600 கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. இதனிடையே, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, மே 3-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. 

எனினும், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தை தினந்தோறும் செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையே, கோயம்பேடு வியாபாரிக்கு ஒருவருக்கும், கோயம்பேட்டில் சலூன் கடை வைத்துள்ள ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த 2 பேரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், கோயம்பேடு காய்கறி சந்தையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை என புகார் வந்த நிலையில், மார்க்கெட்டை 3 ஆக பிரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சந்தையில் உள்ள 3,100 கடைகளையும் 3 பங்காக பிரித்து கோயம்பேடு, கேளம்பாக்கம், மாதாவாராம் பகுதிகளில் சந்தைகள் நடத்த அரசு திட்டமிட்டது. 

அதற்காக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சந்தை வியாபாரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வியாபாரிகள் சந்தையை 3 ஆக பிரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோயம்பேடு மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் சந்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

தொடர்ந்து, பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கோயம்பேட்டில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், சந்தையை மூட வேண்டிய அவசியம் வரும் என்றார். மேலும், இடமாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.

இந்நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சென்னை கோயம்பேடு சந்தையில் 1900 மொத்த விற்பனை கடைகளில் 600 கடைகள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி என்றும் அமைந்தகரையில் 450 சில்லறை விற்பனை கடைகளை அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள 850 பழக்கடைகள் மே 1ஆம் தேதி முதல் மூடப்படும் என்று இன்று நடைபெற்ற 2வது கட்ட பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் முடிவை மொத்த வியாபாரிகள் ஏற்றுக் கொண்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி நிபந்தனையை ஏற்க சிறு வியாபாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். எனவே, கோயம்பேட்டில் உள்ள 1500 சில்லறை விற்பனை கடைகளும் அடைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

.