பண மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கைது!!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கைதாகியுள்ள நிலையில், தற்போது சிவக்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிவக்குமார் விசாரணை செய்யப்படுவார்.

New Delhi/ Bengaluru:

பண மோசடி தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான டி.கே. சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 நாட்களாக இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதன் முடிவில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ கஸ்டடியில் இருக்கிறார். கடந்த 21-ம்தேதி கைதான அவரை நாளை மறுதினம் வரையில் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி கிடைத்துள்ளது.
 

இந்த நிலையில் கர்நாடக காங்கிரசின் முக்கிய தலைவராக இருக்கும் டி.கே. சிவக்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, 'பழிவாங்கும் அரசியல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு சிவக்குமாரின் கைது இன்னொரு உதாரணம் ஆகும். தங்களது கொள்கையால் தோல்வி அடைந்திருக்கும் மத்திய அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இதுபோன்ற கைது நடவடிக்கைகளை எடுக்கிறது' என்று கூறியுள்ளது. 

Newsbeep

கைதுக்குப் பின்னர் விசாரணைக்காக சிவக்குமார் டெல்லி கொண்டு செல்லப்பட உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவக்குமார், 'மறைந்த எனது தந்தைக்கு செய்ய வேண்டிய பூஜைகளை அமலாக்கத்துறையினர் நிம்மதியாக செய்யவிடவில்லை. விநாயகர் சதுர்த்தியை எனது குழந்தைகளுடன் கொண்டாட விரும்பினேன். அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை' என்றார். 

கடந்த 2017 ஆகஸ்டில் சிவகுமாருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதில் கணக்கில் வராத ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.