This Article is From Mar 04, 2020

குஜராத்தில் 2 வருடங்களில் 15,000 பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு! - அதிர்ச்சி தகவல்!

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு பிரிவுகளில் சிகிச்சையில் இருந்தபோது 15,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளதற்கு பாஜக அரசே பொறுப்பு என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

குஜராத்தில் 2 வருடங்களில் 15,000 பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு! - அதிர்ச்சி தகவல்!

குஜராத்தில் 2 வருடங்களில் மட்டும் 15,000 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. (File)

ஹைலைட்ஸ்

  • 2 வருடங்களில் 15,000 பிறந்த குழந்தைகள உயிரிழப்பு
  • குழந்தைகள் உயிரிழப்புக்கு பாஜக அரசே பொறுப்பு என காங்கிரஸ் சாடல்
  • அகமதாபாத்தில் மட்டும் 4,322 குழந்தைகள உயிரிழந்துள்ளன.
New Delhi:

குஜராத்தில் கடந்த 2 வருடங்களில் மட்டும் சிகிச்சை பெற்று வந்த 15,000 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து,  பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு பிரிவுகளில் சிகிச்சையில் இருந்தபோது 15,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளதற்கு பாஜக அரசே பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. 

குஜராத் சட்டமன்றத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று துணை முதல்வர் நிதின் பட்டேல் பேசும் போது, 2018, 2019ம் ஆண்டுகளில் மட்டும் மாநிலம் முழுவதும் 1.06 லட்சம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில், 15,013 குழந்தைகள் சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு பிரிவுகள் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, நேற்றைய தினம் காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, பாஜக அரசே இந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இதுதொடர்பாக ரன்தீப் சுர்ஜேவாலா தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, இரண்டு வருடங்களில் மட்டும் 15,013 குழந்தைகள் உயிரிழந்துளன. அதாவது, சராசரியாக ஒவ்வொரு நாளும் 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இதில், அகமதாபாத்தில் மட்டும் 4,322 குழந்தைகள உயிரிழந்துள்ளன. அது அமித் ஷாவின் நாடாளுமன்ற தொகுதியாகும். என்று சுர்ஜேவாலா தனது ட்வீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அந்த குழந்தைகளின் அழுகை சத்தம் அவருக்கு கேட்கவில்லையா? இது தொடர்பாக யாரேனும் அவரிடம் கேள்வி எழுப்புவார்களா? தொலைக்காட்சி, ஊடகங்கள் கருணை காட்டுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

.