This Article is From Nov 24, 2018

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் ஆட்சியின் மீது சோனியா காந்தி கடும் குற்றம்சாட்டு!

டிசம்பர் 7ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடனான கூட்டணி மூலம் இழந்ததை மீட்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தெலுங்கானா அரசு மக்களுக்கு மிக குறைவாகவே நன்மை செய்கிறது என சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்

New Delhi:

வரும் டிச.7ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் தெலுங்கானாவில் இன்று தனது முதல்கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

இதன் ஒருபகுதியாக ஹைதராபாத் அருகே மேடசால் எனும் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சமீப ஆண்டுகளில் தெலுங்கானா மாநிலத்தின் நிலைமை பெரும் அளவில் மோசமடைந்துள்ளது. கடந்த காலங்களில் நான் பல மாநிலங்களை பார்வையிட செல்லும் போது, அங்கு நான் தெலுங்கானா மாநிலத்தையே வளர்ச்சியின் முன்னுதாரனமாக எடுத்துக்கூறுவேன். ஆனால் எதிர்பாராத விதமாக தற்போதைய ஆட்சியால் தெலுங்கானா மாநிலமானது இரண்டு மடங்கு பின்னுக்கு சென்றுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக இந்த அரசு விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் எந்தவித உதவிகளையும் செய்யிவில்லை. முதல்வரோ அவர் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் மட்டுமே அக்கறை கொண்டு, மக்களை பாதிப்படைய செய்துள்ளார். தங்களது வார்த்தைகளுக்கு உண்மையாக இருப்பவர்களே நம்பிக்கைக்குரியவர்கள்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானாவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முழு முயற்சி எடுக்கும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியது காங்கிரஸ்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் சந்திரசேகர ராவ் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார் என்றார்.

.