This Article is From Aug 25, 2018

சென்னையில் விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் தகவல்

மின்சாரப் பேருந்துகளை இயக்குவதை ஒட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் இங்கிலாந்தைச் சேர்ந்த சி40 வல்லுநர் குழுவுடன் கலந்துரையாடினார்

சென்னையில் விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் தகவல்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் சென்னையில் விரைவில் மின்சாரப் பேருந்துகள், குறிப்பிட்ட வழித் தடங்களில் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

மின்சாரப் பேருந்துகளை இயக்குவதை ஒட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் இங்கிலாந்தைச் சேர்ந்த சி40 வல்லுநர் குழுவுடன் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில், உலகில் பல நகரங்களில் எப்படி மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது மற்றும் மின்சாரப் பேருந்துகள் இயக்குவதில் இருக்கும் சாதக பாதகங்கள் குறித்து அமைச்சருக்கு விளக்கப்பட்டது.

கலந்துரையாடலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘இன்றைய சந்திப்புக்குப் பின்னர், குறிப்பிட்ட சில வழித் தடங்களுக்கு சென்னையில் மின்சாரப் பேருந்துகளை இயக்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மின்சாரப் பேருந்துகளின் விலை மிகவும் அதிகம்தான். ஆனால், டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு ஆகும் பராமரிப்புச் செலவை விட, மின்சாரப் பேருந்துகளுக்குச் செலவு குறைவாக இருக்கும். ஒருமுறை இந்த வகை பேருந்துகளில் சார்ஜ் செய்யப்பட்டால், 240 கிலோ மீட்டர் வரை அவை ஓடும். 54 பேர் இந்த வகை பேருந்துகளில் பயணம் செய்யலாம்’ என்று தெரிவித்தார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சி40 நிறுவனம் அதன் இணையதளத்தில், ‘உலக அளவில் பருவநிலை மாற்றம் அடைந்து வருவதற்கு எதிராக சென்னை ஒரு அடி எடுத்து வைத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, பாரீஸ் ஒப்பந்தத்தில் வரையறுத்துள்ளது போல கரியமில வாயுவின் வெளியேற்றத்தைக் குறைக்க செயல் பட உள்ளது’ என்று இந்த புதிய முன்னெடுப்பு குறித்து குறிப்பிட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.