This Article is From Jan 31, 2019

‘என் சாவுக்கு சென்னை போலீஸ் காரணம்!’-தற்கொலைக்கு முன்னர் வீடியோ வெளியிட்ட டிரைவர்

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது

‘என் சாவுக்கு சென்னை போலீஸ் காரணம்!’-தற்கொலைக்கு முன்னர் வீடியோ வெளியிட்ட டிரைவர்

வீடியோவில் பேசும் நபரான டிரைவர் ராஜேஷ் தற்போது உயிரோடு இல்லை

ஹைலைட்ஸ்

  • வீடியோவில் பேசுபவர் டிரைவர் ராஜேஷ்
  • அவர் தற்கொலை செய்து கொண்டார்
  • இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை செய்து வருகிறது

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பேசும் நபரான டிரைவர் ராஜேஷ் தற்போது உயிரோடு இல்லை. அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், ‘சென்னை போலீஸ்தான் என் சாவுக்கு முழுக் காரணம்' என்று சொல்லியிருக்கிறார். இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

வீடியோவில் ராஜேஷ், ‘இன்று காலை 8 மணியிருக்கும். நான், அம்பத்தூர் பாடியிலிருந்து கோயம்பேடுக்கு காரில் சென்றேன். அண்ணாநகர் சிக்னலில் ஒரு பெண் எம்ப்ளாயை ஏற்றிக்கொண்டு இன்னொருவருக்காக சிக்னல் அருகே காத்திருந்தேன். அப்போது, 2 காவல் துறையினர் வந்தார்கள். வண்டியை இங்கு நிறுத்தாதே என்று சொன்னார்கள். உடனே காரை அங்கிருந்து எடுத்துக்கொண்டு தள்ளிப்போய் நிறுத்தினேன். ரோடு காலியாகத்தான் இருந்தது. 

அதன்பிறகு, அங்கு வந்த போலீஸ்காரர்கள் என்னைப் பார்த்து அசிங்கம் அசிங்கமாகத் திட்டினர். உடனே நான், சார் உள்ளே பெண் இருக்கிறார் என்று கூறியதை அந்த போலீஸ்காரர் கேட்கவில்லை. இதனால் அந்த இடத்திலிருந்து வேறு இடத்தில் காரை நிறுத்தினேன். அவர்கள் அணிந்திருந்த சீறுடைக்காக மரியாதை கொடுத்தேன். போலீஸ்காரர் மட்டும் யூனிபார்மை கழற்றிவிட்டு வந்திருந்தால் நானும்... வேண்டாம் அப்படிப் பேசினால் நல்லா இருக்காது. எங்க போனாலும் போலீஸ்காரர்களால் தொல்லையாக இருக்கிறது.

போலீஸ் இப்படிப் பண்ணலாமா. போலீஸ் தப்பு பண்ணினால் என்ன செய்வது. நீங்கள் வைப்பதுதான் சட்டமா. என்னோடு இது முடியட்டும். தரமணியில் இதுபோலத்தான் ஒரு டிரைவர் இறந்தார். அதன்பிறகு  ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியவில்லை என்றால், வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிளம்புங்கள். அதிகாரத்தை, மக்களிடம் கொடுத்து விடுங்கள்' என்று ஆதங்கத்தோடு குமுறுகிறார். 

இந்த வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து ராஜேஷ், தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாம்பரம் ரயில்வே போலீஸ், ராஜேஷின் சடலத்தை தண்டவாளத்துக்கு அருகிலிந்து கடந்த 25 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகரப் போலீஸ் விசாரணை செய்து வருகிறது. 

.