This Article is From Jul 25, 2019

சென்னையில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

கனமழையை பொறுத்தவரையில் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வடதமிழகத்தின் மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை தற்போது கர்நாடகா பகுதியில் தீவிரமாக உள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு விடிய விடிய மழை கொட்டிதீர்த்தது. தொடர்ந்து, இன்று காலையும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது,

தென்மேற்கு பருவமழை தற்போது கர்நாடகா பகுதியில் தீவிரமாக உள்ளது. தமிழக பகுதியில் வளிமண்டலத்தின் கீழடுக்கு பகுதியில் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். 

கனமழையை பொறுத்தவரையில் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வடதமிழகத்தின் மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். 

மேலும் அவர் கூறும்போது, கடந்த ஜூன் 1 முதல் தற்போது வரை தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 81.மி.மீ, இந்த காலக்கட்டத்தில் பதிவாக வேண்டிய இயல்பு அளவு 114 மி.மீ. இது இயல்பை விட 21 சதவீதம் குறைவு. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில், இடைவெளிவிட்டு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

அதே போல தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், காஞ்சிபுரத்தில் - 3 செ.மீ, காவேரிப்பாக்கத்தில் - 5 செ.மீ, செம்பரம்பாக்கம், தாம்பரம் பகுதியில் - 4 செ.மீ, செங்கல்பட்டில் - 3செ.மீ. மழை பதிவாகியுள்ளது.  
 

.