This Article is From Jun 16, 2020

டெல்லி மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் CCTV கேமராக்கள் அமைக்க அமித்ஷா உத்தரவு!

முன்னதாக, தற்போது 80  ஆயிரம் படுக்கைகள் டெல்லியின் தேவையாக உள்ளது என்றும், வரும் ஜூலை இறுதிக்குள் டெல்லியில் 5.5 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் CCTV கேமராக்கள் அமைக்க அமித்ஷா உத்தரவு!

அமித் ஷா பேக்-அப் கேன்டீன்களை (கோப்பு) அமைக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டார்

ஹைலைட்ஸ்

  • கொரோனா வார்டுகளில் சி.சி.டி.வி கேமராக்கள்
  • டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு 41 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
  • உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்திருந்தது
New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.32 லட்சமாக அதிகரித்திருக்கக்கூடிய நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 41 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நடைப்பெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தார்.  

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தொற்றுநோயை கையாளும் விதம் குறித்தும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாதது குறித்தும் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்திருந்தது. “டெல்லியில் நிலைமை கொடூரமானது, பரிதாபகரமானது, டெல்லி மருத்துவமனைகளில் மிகவும் வருந்தத்தக்க நிலைமை உள்ளது. அங்கு உடல்களுக்கு உரிய கவனிப்பும், அக்கறையும் கொடுக்கப்படுவதில்லை. நோயாளிகளின் குடும்பத்தினருக்கு உயிரிழப்புகள் குறித்து கூட தெரிவிக்கப்படுவதில்லை. இதனால், சில சந்தர்ப்பங்களில் நோயாளிகளின் குடும்பங்கள் இறுதி சடங்குகளில் கூட கலந்துகொள்ள முடியவில்லை.“ என நீதிமன்றம் கூறியிருந்தது. அதேபோல், டெல்லி தவிர்த்து, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்திலும் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இந்த மூன்று மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமித்ஷா டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் நோயாளிகளை முறையாக கண்காணிப்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து மருத்துவமனைகளின் கொரோனா வைரஸ் வார்டுகளில் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவுமாறு தில்லி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும், நோய்தொற்று காரணமாக மருத்துவமனை சமையல் கூடம் ஒன்று மூடப்பட்டது. எனவே உணவு விநியோகத்தை பராமரிக்க பேக்-அப் கேன்டீன்களை அமைக்குமாறு அமித்ஷா  அறிவுறுத்தியிருந்தார். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் மனோ-சமூக ஆலோசனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, தற்போது 80  ஆயிரம் படுக்கைகள் டெல்லியின் தேவையாக உள்ளது என்றும், வரும் ஜூலை இறுதிக்குள் டெல்லியில் 5.5 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாக டெல்லி கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு மத்திய அரசு 500 சிறப்பு ரயில் பெட்டிகளை கொடுப்பதாகவும், இதன் மூலமாக டெல்லியில் 8,000 புதிய படுக்கைகள் உருவாகும் என்றும் அமித்ஷா தெரிவித்திருந்தார். மேலும், டெல்லியில் ஒரு நாளைக்கு கொரோனா வைரஸ் சோதனைகள் அடுத்த சில நாட்களில் 18,000 ஐ எட்டும் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.