தூத்துக்குடி துப்பாக்கிசூடு: சிபிஐ விசாரிக்க உத்தரவு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்

தூத்துக்குடி துப்பாக்கிசூடு: சிபிஐ விசாரிக்க உத்தரவு!
Chennai:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்னர் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. பெருந்திரளான மக்கள் போராட்டம், மே மாதம் 22 ஆம் தேதி 100-வது நாளை எட்டியது. 100-வது நாளன்று அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று கருதி தூத்துக்குடி ஆட்சியர், 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இருந்தும் மக்கள் அறவழியில் போராடுவோம் என்று கூறினர். 100-வது நாளன்று ஊர்வலமாகச் சென்று ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் போராடும் மக்களுக்கும் இடையில் மோதல் உண்டானது. மக்கள் கூட்டத்தைக் கலைக்க, போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதனால், ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த நாளும் துப்பாக்கி சூடு நடத்தியது போலீஸ். இதனால், மொத்தம் 13 பேர் பலியாகினர். இதையடுத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு ஆலையை மூடியது.

இந்த துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது, ‘தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிஐ, விசாரணையை 4 மாதங்களில் முடிக்க வேண்டும்’ என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
 

Listen to the latest songs, only on JioSaavn.com