This Article is From Nov 06, 2019

‘அதைத் தவிர எதுன்னாலும் சரிதான்…’- Sena-வுக்கு BJP-யின் மெஸேஜ்!

Maharashtra Government Formation: 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில், 2.5 ஆண்டுகளுக்குத் தங்கள் கட்சியிலிருந்து ஒருவர் முதல்வராக இருக்க வேண்டும் என்று சிவசேனா கூறுகிறது

‘அதைத் தவிர எதுன்னாலும் சரிதான்…’- Sena-வுக்கு BJP-யின் மெஸேஜ்!

Maharashtra Government Formation: தனது 50:50 ஃபார்முலாவைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது சிவசேனா.

New Delhi:

மகாராஷ்டிராவில் (Maharashtra) தேர்தல் முடிவுகள் வந்து, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் ஆட்சியமைக்கப்படவில்லை. தேர்தலுக்கு முன்பு கூட்டணி வைத்த பாஜக - சிவசேனாவுக்குப் (BJP - Shiv Sena) பெரும்பான்மை இருந்தாலும், அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இன்னும் ஆட்சியமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் தனிப் பெரும் கட்சியான பாஜக, தனது கூட்டணிக் கட்சியான சிவசேனாவிடம், “எங்கள் கதவுகள் 24 மணி நேரமும் திறந்துதான் இருக்கின்றன,” என்றுள்ளது. அதே நேரத்தில் முன்னர் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்தான், இப்போதும் முதலமைச்சராக தொடர்வார் என்பதையும் உறுதிபட தெரிவித்துள்ளது. அந்த ஒரு கோரிக்கையில்தான் சிவசேனாவும் மாறுபடுகிறது. 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில், 2.5 ஆண்டுகளுக்குத் தங்கள் கட்சியிலிருந்து ஒருவர் முதல்வராக இருக்க வேண்டும் என்று சிவசேனா, தனது 50:50 ஃபார்முலாவைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

“மக்கள் எங்கள் கூட்டணி ஆட்சியமைக்க வாக்களித்துள்ளார்கள். ஆனால், சிவசேனா அதற்கு ஒத்துவரவில்லை. நாங்கள் 24 மணி நேரமும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகத்தான் இருக்கிறோம். அதே நேரத்தில் ஃபட்னாவிஸ் தலைமையில்தான் எங்கள் கூட்டணிக் கட்சிகள் இணைய வேண்டும்,” என்று மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 

oqhvuu0o

மேலும் பாஜக தரப்பு, “காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது குறித்து சிவசேனா யோசிக்க வேண்டும். நீண்ட நாட்களுக்கு அதன் விளைவு எப்படியாக இருக்கும் என்பதை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர மற்ற எதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்,” என்று கூறுகிறது. 

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. இருவரும் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் சுலபமாக மெஜாரிட்டி கிடைத்துவிடும். சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

தேர்தலுக்கு முன்பே பாஜக - சிவசேனா இடையே நிறைய உரசல்கள் இருந்தன. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே, அதிகாரப் பகிர்வில் 50:50 ஃபார்முலா அமலாக்கப்பட வேண்டும் என்று சொன்னதால், இருவருக்கும் இடையிலான பிளவு மேலும் அதிகரித்தது. 

மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை, பாஜக, தனிப் பெரும் கட்சியாக தேர்தலில் உருவெடுத்திருந்தாலும், தனிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. பாஜக ஆட்சியமைக்க சிவசேனாவின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் சிவசேனா, ஆட்சியில் சரிபாதி பங்கு வேண்டும் என்ற கறார் கோரிக்கையை வைத்துள்ளது. இந்த கோரிக்கைதான் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிப்பதற்குக் காரணம். 

இப்படி இந்த விஷயம் தேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சிவசேனா தரப்பு, ‘பாஜக இல்லாமலேயே எங்களுக்கு 170 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது,' என்ற புதிய வெடியைக் கொளுத்திப் போட்டுள்ளது.

“தற்போதைய நிலைமையில் எங்களிடம் ஆட்சியமைப்பதற்கான பலம் இல்லை. பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளிடம்தான் அது உள்ளது. நாங்கள் அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கையைத்தான் பார்த்து வருகிறோம்.” என்று சூசகமாக பதில் அளித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். சிவசேனா, சரத் பவாருடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

.