This Article is From Sep 04, 2018

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விபத்து - பலர் சிக்கி இருக்கக் கூடும் என அச்சம்

இடிபாடுகளில் பல கார்களும், வாகனங்களும் சிக்கிக் கொண்டிருப்பதாக, தகவல்கள் கூறுகின்றன. இதுவரை 6 பேர் காயமடைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது

Kolkata:

தெற்கு கொல்கத்தாவின், மஜெர்ஹத் என்ற இடத்தில், உள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று தீடீரென இடிந்து விழுந்தது, பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேம்பாலத்தின் மையப்பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இடிபாடுகளில் பல கார்களும், வாகனங்களும் சிக்கிக் கொண்டிருப்பதாக, தகவல்கள் கூறுகின்றன. இதுவரை 6 பேர் காயமடைந்திருப்பதாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மாநில அமைச்சர் ஃபிர்ஹத் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.  

ஒருவர் பலியானதாக, மீட்கச் சென்ற பொது மக்களில் சிலர் கூறுகின்றனர். ஆனால், அந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் ஃபோர்ட் வில்லியம்ஸ் ராணுவ தளத்தில் இருந்து வீரர்கள், சம்பவம் நடந்த சில சில மணித்துளிகளில் மீட்பு பணிக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த மேம்பாலம், அலிபூர் ரயில் பாதைக்கு மேலே கட்டப்பட்டுள்ளது. மேம்பாலத்தைச் சுற்றிலும் முடிக்கப்படாத நிலையில் கட்டிடங்கள் அதிகம் உள்ளன. இந்த மேம்பாலம் கட்டி 40 ஆண்டுகள் ஆகின்றன என தெரிய வந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “ தற்போது மீட்புப் பணிகள் மட்டுமே முக்கியம். இது குறித்து விசாரணை பின்னர் நடத்தப்படும்” என்றார்.

சுற்றி இருந்தவர்கள் கூறிய தகவல் படி, 4.45 மணியளவில், இந்த மேம்பாலம், இடிந்து விழுந்துள்ளது. சில கார்களும், மினி பேருந்து ஒன்றும் சிக்கிக் கொண்டிருக்கின்றன.

இது போலவே, 2016 மார்ச் மாதம், கொல்கத்தாவில் பரபரப்பாக இருக்கும் இடமான புர்ராபஜாரில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 26 பேர் பலியாகினர். 90 பேர் காயமடைந்தனர். 8 பொறியாளர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

.