This Article is From Jul 08, 2020

முகக்கவசம் தேவையில்லை என்று கூறி வந்த பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் மட்டும் இதுவரை 65 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

முகக்கவசம் தேவையில்லை என்று கூறி வந்த பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி!

இதற்கு முன்னதாக இரண்டு முறை அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு நாடுகளில் பிரேசில் 2வது இடம்
  • முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது
  • இந்தியா 3வது இடத்தில் உள்ளது
Brasilia:

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் மட்டும் இதுவரை 65 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், 16 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘கடந்த ஞாயிறன்று, எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, உடல் சோர்வும், 38 டிகிரி செல்சியஸ்க்கு காய்ச்சல் இருந்தது' என்றுள்ளார்

இதையடுத்து, கடந்த திங்களன்று இராணுவ மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், நேற்று அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், தான் நன்றாக இருப்பதாகவும், லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும் கூறியுள்ளார் போல்சோனரோ.

கொரோனா தொற்றுக்காக, மலேரியா மற்றும் லூபஸ்க்கு கொடுக்கப்படும் ஹைட்ராக்‌ஸி குளோரோகுயின் மற்றும் நிமோனியாவுக்கு அளிக்கப்படும் அசித்ரோமைசின் ஆகிய மருந்துகளை எடுத்து வருவதாக போல்சோனரோ தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இரண்டு முறை அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு முறையும் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்றே முடிவுகள் வந்தன. இதன் காரணமாக அவர் சமூக விலகல் வேண்டாம் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் தேவையில்லை என்று கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை அன்று ஜெய்ர் போல்சோனரோ, அமெரிக்கத் தூதருடன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அதில் அவர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

.