இன்று தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடிய பிரதமர் மோடி, 98 வயது தாயார் ஹீரா பென்னை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். அவருடன் மதிய உணவை மோடி சாப்பிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் காந்தி நகரில் உள்ள ரைசின் என்ற கிராமத்தில் தாயார் ஹீரா பென் வசித்து வருகிறார். அவரை இளைய மகன் பங்கஜ் மோடி கவனித்து வருகிறார்.
ஒவ்வொரு முக்கியமான தருணங்களின்போதும் பிரதமர் மோடி தனது தாயாரை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக பெரும்பான்மை பெற்றபோதும் அவர் தனது தாயாரை சந்தித்தார்.
ஆனால், இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்றபோது அதைப் பார்க்க தாயார் ஹீரா பென் நேரில் வரவில்லை. தொலைக்காட்சியில் மோடி பிரதமராக பதவியேற்ற காட்சியை குஜராத்தில் இருந்தபடியே அவர் பார்த்து ரசித்தார்.
இந்த நிலையில் 69வது பிறந்த நாளான இன்று தாயாரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். சொந்த வீட்டுக்கு வந்த அவரை உறவினர்களை சந்தித்துப் பேசினார்.
பிறந்த நாளையொட்டி சொந்த மாநிலமான குஜராத்தில் பல நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டார். நர்மதா மாவட்டத்திற்கு சென்ற அவர் அங்கு கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை, படேலின் ஒற்றுமைச் சிலை ஆகியவற்றை பார்வையிட்டார்.
மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக குஜராத் இருப்பதாகவும், குஜராத் மக்கள் தாங்கள் பெற்றிருக்கும் வளர்ச்சியை மற்ற மாநில மக்களும் பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.