This Article is From Dec 07, 2018

ராஜஸ்தான் முதல்வரின் ‘எடை’ குறித்து சர்ச்சை கருத்து; விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை!

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது

ஷரத் யாதவ் மீது, ராஜஸ்தான் பாஜக, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது

ஹைலைட்ஸ்

  • பிரசாரத்தில் யாதவ் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்
  • யாதவின் கருத்து அதிர்ச்சியளிக்கிளது, ராஜே
  • யாதவ், சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து கருத்து கூறி வருகிறார்
Jhalawar:

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் பிகாரின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான ஷரத் யாதவ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் எடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

ராஜஸ்தானில் லோக் தந்ரிக் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்டிருந்த ஷரத் யாதவ், ‘வசுந்தரா ஓய்வெடுக்கட்டும், அவர் களைப்படைந்து விட்டார்' என்று எடையைக் குறிக்கும் வகையில் பேசிவிட்டார்.

இது குறித்து இன்று காலை அவர் மீண்டும் பேசுகையில், ‘நான் சொன்னது ஒரு நகைச்சுவைக்காக. எனக்கு ராஜேவை பல ஆண்டுகளாக தெரியும். நான் சொன்னது அவரை இழிவுப்படுத்தும் நோக்கில் அல்ல. அவரை சமீபத்தில் சந்திக்கும் போது கூட, எடை கூடிக் கொண்டே போகிறீர்கள் என்று சொன்னேன்' என்று, தான் முன்னர் கூறிய கருத்துக்கு நியாயம் கற்பித்தார்.

sharad yadav

 

இன்று தேர்தலில் வாக்குப்பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜே, ‘எனக்கு யாதவின் கருத்து அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருந்தது. என்னை அது அவமானப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் முன் வந்து, யாதவ் மீது தானாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைப் போன்ற ஒரு முன்னுதாரணத்தையா அவர் மற்றவர்களுக்கு காண்பிக்க விரும்புகிறார். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்ணியத்துடன் பேசிப் பழக வேண்டும்' என்று கொதித்தார்.

ஷரத் யாதவ் மீது, ராஜஸ்தான் பாஜக, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. யாதவ், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்தவர். அவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, அந்தக் கட்சியிலிருந்து பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.