This Article is From Sep 23, 2019

Balakot: மீண்டும் செயல்படத் தொடங்கிய பாலக்கோட் பயங்கரவாத முகாம்! - ராணுவ தலைமை தளபதி

இதுதொடர்பாக அரசு வட்டாரங்கள் என்டிடிவிக்கு அளித்த தகவலில், இஸ்ரேல் தயாரித்த லேசர் குண்டுகளால் தாக்கப்பட்ட பாலகோட் முகாமில், சுமார் 129 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதாக தெரிவித்துள்ளன.

பாலக்கோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

Chennai:

கடந்த பிப்ரவிரி மாதம் இந்தியாவால் தகர்க்கப்பட்ட, பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பாலக்கோட் முகாம் சமீபத்தில் பாகிஸ்தானால் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தாக்குதலால், பாலக்கோட் முகாம் கடுமையாக பாதிக்கப்பட்டு, சேதமடைந்து, தகர்க்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. அதனால், தான் மக்கள் அங்கிருந்து விலகி தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளனர். இது இந்திய விமானப்படை பாலக்கோட்டில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.   

பாலக்கோட் முகாம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது குறித்த தகவல்கள் சில செய்தித்தாள்களில் வந்த நிலையில், ராணுவத் தளபதி அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அரசு வட்டாரங்கள் என்டிடிவிக்கு அளித்த தகவலில், இஸ்ரேல் தயாரித்த லேசர் குண்டுகளால் தாக்கப்பட்ட பாலகோட் முகாமில், சுமார் 129 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதாக தெரிவித்துள்ளன.

மேலும், அவர் கூறும்போது, காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு உதவியவர்களுக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களிடையே தகவல் தொடர்பு பாதிக்கப்படவில்லை. பயங்கரவாதிகள் நம்முடைய எல்லைக்குள் நுழையவே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இத்தகைய அத்துமீறிய தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என்பது நமக்கு தெரியும். பெரும்பாலான ஊடுருவல் முயற்சிகளை நம்முடைய பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்துள்ளார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத்தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும், ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானைப்படை வீரர்கள் கடந்த பிப்.26ம் தேதி குண்டுகள் வீசி பயங்கரவாத பயிற்சி முகாமை தரைமட்டமாக்கியது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

.