This Article is From Nov 24, 2018

ராமர் கோயில் நிகழ்ச்சி… பதற்றத்தில் அயோத்யா!

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்யாவில், ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ராமர் கோயில் நிகழ்ச்சி… பதற்றத்தில் அயோத்யா!

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்யாவில், ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளால் மிகவும் பதற்றமான சூழ்நிலையில் அயோத்யா இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்யாவில் இரண்டு நாட்கள் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருக்கிறார். அவர் முதலாவதாக அயோத்யாவின் ராமஜென்மபூமியில் பூஜைகள் செய்து அங்குள்ள மக்களிடமும் சாதுக்களிடமும் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சிவநேரி கோட்டையிலிருந்து ஒரு சட்டியில் மண் கொண்டு செல்வார் என்றும், அதை ராமஜென்ம்பூமியின் புரோகிதரிடம் கொடுப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே அயோத்யாவுக்கு வரவுள்ளதையொட்டி, அம்மாநில சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், ‘ஜனாதிபதி முதல் உத்தர பிரதேச முதல்வர் வரை அனைவரும் பாஜக-வினரே. இந்நேரத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர முடியும். ஆனால் அது ஏன் செய்யப்படவில்லை. ராமர் கோயிலுக்கு எதிராக பேசுபவர்களால் இந்த நாட்டில் நடமாட முடியாது' என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர, நாளை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், ‘தர்ம சன்சத்' நிகழ்ச்சி அயோத்யாவில் நடத்தப்பட உள்ளது. 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், இந்த நிகழ்ச்சிக்குத் தான் அதிக அளவிலான இந்துக்களும் புரோகிதகர்களும் ஒன்றுகூட உள்ளனர் என்று அந்த அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. ‘இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், ராமர் கோயில் கட்டுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிப்பதே' என்று விஎச்பி கூறியுள்ளது.

f7ccn088

இந்த நிகழ்ச்சிக்கு ஆள் சேர்க்கும் விதத்தில் உத்தர பிரதேசத்தில் இரு சக்கர வாகனங்கள் மூலம் பேரணி நடத்தி வருகிறது விஎச்பி. அப்படிப்பட்ட பேரணி ஒன்று மிர்சாபூரில் நடந்தபோது தான், இரு தரப்புக்கு இடையில் மோதல் வெடித்தது. இந்த சம்பவம் குறித்து இக்பால் அன்சாரி என்பவர், ‘விஎச்பி, மிர்சாபூர் மற்றும் கான்பூர் பகுதிகளில் சிறுபான்மையினர் அதிகம் இருக்கும் இடங்களில் இந்த இரு சக்கர வாகன பேரணியை நடத்திய போது, மோதல் வெடித்தது. ஆனால், இந்த இரு மோதல்களிலும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதைப் போன்ற மோதலே, முஸ்லிம்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்குப் போதுமானது.

1992 ஆம் ஆண்டு போல அதிக அளவிலான வலதுசாரிகள் அயோத்யாவுக்கு வர இருக்கின்றார்கள் என்றால், அப்பகுதியில் இருக்கும் முஸ்லிம்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். அப்படி பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை என்றால், நான் நவம்பர் 25 ஆம் தேதிக்கு முன்னர் அயோத்யாவிலிருந்து வேறு இடத்துக்குச் சென்று விடுவேன்' என்று விளக்கியுள்ளார்.

ஆனால் விஎச்பி அமைப்போ, ‘எங்கள் அமைப்பைச் சேர்ந்த ராமர் பக்தர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். அவர்கள் என்ன சொல்கிறோமோ அதைக் கேட்டு நடக்கக் கூடியவர்கள். இது ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சி ஆதலால், புரோகிதர்கள் சொல்படி பக்தர்கள் நடந்து கொள்வார்கள்' என்று கூறியுள்ளது.

‘பாஜக உச்ச நீதிமன்றத்தையோ சட்ட சாசனத்தையோ நம்பத் தயாராக இல்லை. அவர்கள் எந்த உச்சத்துக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில்… குறிப்பாக அயோத்யாவில் நிலவும் சூழலை உச்ச நீதிமன்றம் கணக்கில் கொண்டு, அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்பக் கூட பரிந்துரை செய்ய வேண்டும்' என்று மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அயோத்யாவில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டதாக மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

.