This Article is From Aug 18, 2018

வீட்டிலிருந்தபடியே ஆப்பிளின் தகவல்களைச் ‘சுட்ட’ பலே கில்லாடிச் சிறுவன்

மெல்பர்னைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அமெரிக்கக் கணினி நிறுவனமான ஆப்பிளின் மைய நினைவகச் சட்டகத்தினுள் கடந்த ஆண்டில் பலமுறை அனுமதியின்றி உட்புகுந்துள்ளான்

வீட்டிலிருந்தபடியே ஆப்பிளின் தகவல்களைச் ‘சுட்ட’ பலே கில்லாடிச் சிறுவன்
Sydney:

ஆப்பிள் நிறுவன வலைத்தளத்துக்குள் ஆஸ்திரேலிய சிறுவன் ஒருவன் அனுமதியின்றி உட்புகுந்து தகவல்களைத் திருடிவிட்டதாக அந்நாட்டு நாளேடுகள் வெளியிட்டன. இதையடுத்து நேற்று ஆப்பிள் நிறுவனம், “வாடிக்கையாளர்களின் எந்தத் தகவல்களும் திருடுபோகவில்லை” என்று இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளது.

“மெல்பர்னைச் சேர்ந்த பதினாறு வயது சிறுவன் ஒருவன் அமெரிக்கக் கணினி நிறுவனமான ஆப்பிளின் மைய நினைவகச் சட்டகத்தினுள் கடந்த ஆண்டில் பலமுறை அனுமதியின்றி உட்புகுந்துள்ளான்” என்று அச்சிறுவனின் வழக்கறிஞர் கோர்ட்டில் கூறியதாக தி ஏஜ் நாளேடு செய்தி வெளியிட்டது. 90 கிகா பைட்டுகள் வரை மிகவும் பாதுகாக்கப்பட்ட இரகசிய தகவல்களை தனது அடையாளத்தை விட்டுச்செல்லாமல் அவன் பதிவிறக்கியுள்ளான் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆப்பிள் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான் FBIஐ நாட, அவர்கள் இதனை ஆஸ்திரேலிய காவல்துறையினரின் (AFP) கவனத்துக்குக் கொண்டு சென்றனர். சிறுவனின் வீட்டில் சோதனையிட்டபோது ஆஸ்திரேலிய காவல்துறையினர் பறிமுதல் செய்த இரண்டு மடிக்கணினிகள், ஒரு மொபைல் போன், ஒரு வன்வட்டோடி (hard disk) ஆகியவற்றை ஆராய்ந்தபோது அவன் ஆப்பிள் வலைத்தளத்தை ஹேக் செய்தது உறுதியானது.

ஆப்பிள் நிறுவனத் தகவல்கள் அடங்கிய கோப்புகளை “hacky hack hack” என்ற பெயரிலான கோப்பறைக்குள் அவன் சேமித்து வைத்திருந்ததாகவும் நாளேட்டுச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. தனது இந்த தீரச்செயலை வாட்சப்பில் பீற்றியதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஆப்பிள் செய்தித்தொடர்பாளர், “அனுமதியின்றி ஒருவர் உட்புக முயல்வதைக் கண்டறிந்த எங்கள் நிறுவனப் பாதுகாப்புப் பணியாளர்கள் அதனைக் கட்டுப்படுத்தி, சட்டத்துறைக்கு அதனைப் புகாராகவும் அளித்தனர். இதில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல் எதுவும் திருடப்படவில்லை” என்று மட்டும் கூறினார்.

வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இதுபற்றி எதுவும் கூற இயலாது என ஆஸ்திரேலிய போலிசார் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். நீதிமன்ர செய்தித்தொடர்பாளரும் ஆகஸ்ட் 20 தண்டனை வழங்கப்படும் என்பதைத் தாண்டி எதையும் கூற மறுத்துவிட்டார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் 18வயதுக்கு இளையவர் என்பதால் அவரது பெயரை வெளியிட இயலாது.

.