This Article is From Jul 28, 2018

பிகாரை புரட்டிப்போட்ட சிறுமிகள் பலாத்கார சம்பவம்… மருத்து அறிக்கையில் பகீர் தகவல்!

பிகாரில் அரசு விடுதி ஒன்றில் தங்கியிருந்த சிறுமிகள், பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக சில வாரங்களுக்கு முன்னர் புகார் எழுந்தது

பிகாரை புரட்டிப்போட்ட சிறுமிகள் பலாத்கார சம்பவம்… மருத்து அறிக்கையில் பகீர் தகவல்!
Patna:

பிகாரில் அரசுக்கு சொந்தமாக இருக்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சிறுமிகள், பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக சில வாரங்களுக்கு முன்னர் புகார் எழுந்தது. இதையடுத்து, சிறுமிகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. அதில் நேற்றுவரை விடுதியில் தங்கியிருந்த 42 சிறுமிகளில் 29 பேர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மேலும் 5 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று மருத்துவ அறிக்கை கூறியுள்ளது.

பிகார், முசாஃபர்பூர் மாவட்டத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் விடுதியில் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று மும்பையில் இருக்கும் டாடா இன்ஸ்டிட்டியூட் நிறுவனம் ஒரு அறிக்கையை சமர்பித்தது. விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்கள் மூலம் இந்த புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பிகாரின் எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுக்கவே, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட 11 பேரில் 10 பேரை சிபிஐ கைது செய்து விசாரித்து வருகிறது.

மேலும், பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சிறுமி விடுதி வளாகத்துக்குள் புதைக்கப்பட்டதாகவும் பகீர் புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த திங்கள் கிழமை வளாகத்தைத் தோண்டி சிறுமியின் சடலத்தை எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரை சிறுமியின் உடல் கிடைக்கவில்லை. 

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து சிறுமிகளுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. அதில் விடுதியில் தங்கியிருந்த 42 சிறுமிகளில் 34 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சிறுமிகள் பக்கத்து மாவட்டங்களில் இருக்கும் விடுதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

.