This Article is From Aug 30, 2019

அசாமின் இறுதி குடிமக்கள் பட்டியல் (NRC) நாளை வெளியீடு; என்னவாகும் 41 லட்சம் மக்களின் நிலை- 10 ஃபேக்ட்ஸ்!

’என்.ஆர்.சி பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களுக்குப் போதிய பாதுகாப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று அசாம் காவல் துறை ட்விட்டர் மூலம் கூறியுள்ளது. 

என்.ஆர்.சி பட்டியல் வெளியிடப்பட உள்ளதால், அசாமில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • 1951 ஆம் ஆண்டு, முதல் என்.ஆர்.சி பட்டியல் வெளியிடப்பட்டது
  • அசாமில், பன்மடங்கு பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது
  • அசாம் போலீஸ், மக்களிடம் வதந்திகளை நம்பவேண்டாம் என்றுள்ளது
New Delhi/Guwahati:

அசாமில் இறுதி குடிமக்கள் பட்டியல் (என்.ஆர்.சி), நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும். கடந்த ஓராண்டுக்கு முன்னர் குடிமக்கள் பட்டியலின் முதல் வரைவு வெளியிடப்பட்டது. சுமார் 41 லட்சம் மக்களின் பெயர் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்நிலையில் நாளை வெளியாகும் பட்டியல் ஒரு நபர் இந்தியரா, அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவரா என்பதை நிர்ணயிக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பின்னர், ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து நாளை அடுத்த பெரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

இது குறித்த 10 முக்கிய தகவல்கள்:

1.நாளை வெளியாகும் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை என்றாலும், ஒரு நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்லிவிட முடியாது. அனைத்து சட்டப் பூர்வ அம்சங்களும் அவர்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்திலேயே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெறாதவர்கள், வெளிநாட்டவர்களுக்கான தீர்ப்பாயத்தில் அது குறித்து முறையிடலாம். பட்டியல் வெளியான 120 நாட்களுக்குள் தீர்ப்பாயத்தில் முறையிடப்பட வேண்டும். 

2.என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு உதவும் வகையில் 1,000 தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது 100 தீர்ப்பாயங்கள் திறக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் முதல் வாரத்தில் 200 தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட உள்ளது. தீர்ப்பாயத்தில் ஒருவருக்கு எதிராக தீர்புப வந்தாலும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்யலாம். 

3.என்.ஆர்.சி பட்டியல் வெளியிடப்பட உள்ளதால், அசாமில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, 20,000 துணை ராணுவப் படை வீரர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசாமிற்கு அனுப்பியுள்ளது. 

4.'என்.ஆர்.சி பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களுக்குப் போதிய பாதுகாப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று அசாம் காவல் துறை ட்விட்டர் மூலம் கூறியுள்ளது. 

5.'என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெறாதவர்கள் வெளிநாட்டவர்கள் தீர்ப்பாயத்தில் முறையிடலாம். அங்கும் அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டால் மட்டுமே மாநில அரசு அவர்களை கைது செய்யும்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

6.மத்திய அரசு, என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு சட்ட உதவி வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் தரப்பும், மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. 

7.என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெறாத பெங்காலி இந்துக்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளது பாஜக தரப்பு. இந்நிலையில் கடந்த வாரம் அசாம் முதல்வர் சர்பாநந்தா சோனோவால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அவர், “பட்டியலில் உள்ள வெளிநாட்டவர்களை நீக்குவது குறித்தும், பட்டியலில் இல்லாத குடிமக்களை சேர்ப்பது குறித்தும் அரசு தனியாக ஒரு சட்டம் கொண்டு வர வாய்ப்புள்ளது” என்றார். 

8.அசாமில் 18 சதவிகித மக்கள், பெங்காலி இந்துக்கள் ஆவர். அவர்கள், பாஜக-வுக்கு ஆதரவாக இருப்பவர்கள். அந்த மக்கள் பட்டியலில் இடம் பெறாதது குறித்து பாஜக கவலையடைந்துள்ளதாம். 

9.இந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அசாமில் மொத்தம் இருக்கும் 14 தொகுதிகளில் 9-ஐக் கைப்பற்றியது பாஜக. மாநிலத்தில் இருக்கும் பழங்குடியினர், அசாம் இந்துக்கள் மற்றும் பெங்காலி இந்துக்களின் வாக்குகள்தான் பாஜக-வின் வெற்றிக்குக்  காரணமாக அமைந்தது. 

10.தேசிய குடிமக்கள் பதிவு என சொல்லப்படும் என்.ஆர்.சி, அசாமில் முதன்முறையாக 1951 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. வங்கதேசத்திலிருந்து மார்ச் 25, 1971 ஆம் தேதிக்குப் பின்னர் வந்து குடியேறியவர்களை வடிகட்டும் நோக்கில் இந்த பட்டியல் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. 


 

.