This Article is From Jan 25, 2019

உங்களுக்குக் கடிதம் எழுதுகிறார் பிரதமர் மோடி… தேர்தலுக்கு கட்டம் கட்டும் பாஜக!

மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல், இப்படி மத்திய அரசு தன்னிச்சையாக கடிதம் அனுப்புவதை, பல மாநில அரசுகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன

இந்த கடிதம் அனுப்பும் நடைமுறையை அடுத்துதான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தன் மாநிலம் பங்கெடுக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

ஹைலைட்ஸ்

  • கடிதங்களுக்கு ரூ.15.75 கோடி செலவாகியுள்ளதாக தகவல்
  • மோடி அரசின் திட்டங்கள் குறித்து கடிதத்தில் விளக்கம்
  • ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்தான கடிதம் இது
Thiruvananthapuram/New Delhi:

இன்னும் ஒரு சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. தேசிய அளவில் உள்ள பிரதான கட்சிகள் லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்றேயாக வேண்டும் என்பதற்காக அரசியல் காய் நகர்த்தல்களை படு ஜோராக செய்து வருகின்றன. இப்படி பரபரப்பான அரசியல் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி பல கோடி இந்தியர்களின் வீட்டுக்கு கடிதம் எழுத உள்ளார். அந்த கடிதத்தில், இந்த உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்று சொல்லப்படும் ‘ஆயுஷ்மான் பாரத்' குறித்து எழுதியுள்ளார். 

இதுவரை 7.5 கோடி கடிதங்களை, 15.75 கோடி ரூபாயில் மத்திய அரசு அச்சிட்டு, தயார் நிலையில் வைத்துள்ளதாக NDTV-க்கு தகவல் வந்துள்ளது. 

‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா' என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

அந்த கடிதத்தில் மோடி, “என் வாழ்க்கையில் வறுமையை அனுபவித்தவன் நான். ஏழைகளை வறுமையிலிருந்து மீட்பதற்கு ஒரே வழி, அந்த நிலைமையிலிருந்து அவர்களை மீட்பதுதான். என்னை மக்கள் பிரதமராக தேர்ந்தெடுத்த பின்னர், ஏழைகளை வறுமை நிலையிலிருந்து மீட்கவே போராடி வருகிறேன். அவர்களுக்கு வீடு கட்டுவது முதல் வருமானத்தைப் பெருக்குவது வரை, கல்வி முதல் சுகாதாரம் வரை…” என நீள்கிறது அந்த கடிதம். 

2n6hs0bo

 

 

மத்திய அரசின் திட்டங்களான பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, சவுபாக்கியா திட்டம், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டம் உள்ளிட்டவை குறித்து அந்த கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளது.

கடிதங்களை அச்சிடுவதற்கு அதிக நிதி செலவாகியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் தலைவர் இந்து பூஷண், “நிர்வாக நிதியிலிருந்துதான் கடிதங்கள் அச்சிடப்பட்டன. அதனால், திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியில் எந்த பாதிப்பும் இல்லை” என்று NDTV-யிடம் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் பிரதமர், நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதுவது அரசியல் நோக்கத்துக்காகத்தான் என்று இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. “மருத்துவ காப்பீட்டுப் பயனாளர்களுக்கு எழுதப்பட்டுள்ள இந்த கடிதங்கள், மத்திய அரசின் அனைத்துத் திட்டங்கள் குறித்தும் விளக்குகின்றன. ஸ்பீடு போஸ்ட் மூலம் அனைத்து கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு கடிதத்துக்கு 40 ரூபாய் ஆகியிருக்கும். எங்கிருந்து இந்த செலவுகளுக்கெல்லாம் அரசுக்குப் பணம் வருகிறது” என்று சிபிஎம் எம்.பி ராஜேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இந்து,  “கடிதம் அனுப்பும் நடைமுறை தேர்தலுக்காக செய்யப்பட்டது அல்ல. இந்த கடிதம் மூலம் பலருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிய வந்துள்ளது. இந்த கடிதம் அனுப்பப்பட்ட பிறகு பலர் முன்வந்து திட்டத்தை பயன்படுத்தியுள்ளனர்” என்று விளக்கம் அளித்துள்ளார். 

இந்த கடிதம் அனுப்பும் நடைமுறையை அடுத்துதான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தன் மாநிலம் பங்கெடுக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

ஆளும் பாஜக தரப்போ, “அரசையும் அரசின் திட்டங்களையும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த கடிதம் அனுப்பும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இப்படி கடிதம் அனுப்புவதன் மூலம், மேலும் பலர் அரசின் திட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள்” என்று விளக்கியுள்ளது. 

மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல், இப்படி மத்திய அரசு தன்னிச்சையாக கடிதம் அனுப்புவதை, பல மாநில அரசுகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன.

கேரளாவுக்கு இதுவரை 12 லட்சம் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளனவாம். இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், “எங்களுக்கு இந்த கடிதம் குறித்து மத்திய அரசிடமிருந்து ஆணை வந்துள்ளது. அனைத்து கடிதங்களும் உடனடியாக அனுப்பப்பட வேண்டும் என்பதுதான் அந்த ஆணை. அதை நாங்கள் செயல்படுத்தத் தொடங்கிவிட்டோம்” என்று கூறியுள்ளார். 

.