This Article is From Feb 05, 2020

'நடிகராக இருப்பதால் ரஜினிகாந்துக்கு அரசியல் இன்னும் சரியாக புரியவில்லை' - உதயநிதி ஸ்டாலின்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கி நடத்தி வருகிறது. சென்னை லயோலா கல்லூரியில் கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று கையெழுத்து இயக்கத்தை நடத்தினார்.

'நடிகராக இருப்பதால் ரஜினிகாந்துக்கு அரசியல் இன்னும் சரியாக புரியவில்லை' - உதயநிதி ஸ்டாலின்

குடியுரிமை சட்டம் தொடர்பாக ரஜினி காந்த் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரஜினி சார் அவர்கள் நடிகராக இருப்பதால் அவருக்கு அரசியல் இன்னும் சரியாக புரியவில்லை. அவர் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், அவரது கருத்துக்களுக்கு பதில் அளிக்கிறோம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டதிருத்தமான என்.ஆர்.சி., தேசிய குடிமக்கள் பதிவேடான என்.பி.ஆர். குறித்து ரஜினிகாந்த் முதன்முறையாக தனது நிலைப்பாட்டை இன்று தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 
என்பிஆர் ரொம்ப முக்கியம். 2010 ஆம் ஆண்டு காங்கிரஸும் செய்திருக்காங்க. 2020-லயும் எடுத்துதான் ஆகணும். இது மக்கள் தொகை. யார் வெளிநாட்டுக் காரங்க. யார் உள்நாட்டுக் காரங்கனு தெரிஞ்சாகணும். அது ரொம்ப அவசியம். என்சிஆர்-ஐப் பொறுத்தவரை மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கல. இன்னும் யோசனதான் பண்ணிட்டு இருக்காங்க. அது பற்றி முழுசா தெரிஞ்ச பிறகுதான் என்னானு சொல்ல முடியும்.

சிஏஏ பற்றி அவங்க ரொம்ப தெளிவா சொல்லிட்டாங்க. இந்தியாவுல வாழுற மக்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. அவங்க குடியுரிமைக்கு எந்த பாதிப்பும் இருக்காதுனு சொல்லிட்டாங்க. மற்ற நாடுகளில இருந்து வரவங்களுக்கான ஒரு நடைமுறைதான் இது. முக்கியமா முஸ்லிம்களுக்கு இந்த சட்டம் மூலம் பெரிய அச்சுறுத்தல் இருக்கிறதா பீதி கிளப்பிட்டாங்க. இஸ்லாம் மதத்திற்கு எந்த அளவுக்கு இங்க உரிமை இருக்குனா, பிரிவினை போது அங்க போகாம இங்கயே இருந்தாங்க. வாழ்ந்தாலும் செத்தாலும் இதுதான் என் பூமி வாழுறாங்க. அவங்கள எப்டி வந்து வெளிய அனுப்புறது. 

அந்த மாதிரி எதாவது முஸ்லிம்களுக்கு பாதிப்பு வந்தா, ரஜினிகாந்த் முதல் ஆளா குரல் கொடுப்பேன். ஆனா, சில அரசியல் கட்சிகள் அவங்க சொந்த லாபத்துக்காக தூண்டி விடுறாங்க. மத குருகளும் இதுக்குத் துணை போறாங்க. இது ரொம்ப தவறான விஷயம்.

முக்கியமா மாணவர்கள், தயவு செய்து போராட்டத்துக்கு இறங்குறதுக்கு முன்னாடி தீர விசாரிச்சிட்டு இறங்குங்க. இல்லைனா உங்களுக்குதான் பிரச்னை வரும். போலீஸ் எப்ஐஆர் எதாவது போட்டாங்கன்னா, வாழ்க்கையே முடிஞ்சு போயிடும். கவனமா இருக்கணும் மாணவர்கள். என்று பதில் அளித்திருந்தார். 

இந்த நிலையில், சென்னை லயோலா கல்லூரியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய திமுக இளைஞரணி செயலாளர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி திமுக சார்பாக கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களும், மாணவர்களும் ஆர்வத்துடன் தன்னெழுச்சியாக கையெழுத்திட்டு செல்கின்றனர். ஒருகோடி கையெழுத்தை வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பவுள்ளோம். நான் படித்த லயோலா கல்லூரியில் மாணவர்களிடம் கையெழுத்து பெற்று வருகிறேன். இதில் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. 

ரஜினிகாந்த் அவர்கள் ஒரு நல்ல நடிகர். முதலில் அவர் அரசியல் கட்சி தொடங்கட்டும். கொள்கைகளை சொல்லட்டும். ஒட்டுமொத்த நாடு முழுவதும் மாணவர்கள் விருப்பத்துடன் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடுகின்றனர். ரஜினி சார் அவர்கள் நடிகராக இருப்பதால் அவருக்கு அரசியல் இன்னும் சரியாக புரியவில்லை. அவர் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், அவரது கருத்துக்களுக்கு பதில் அளிக்கிறோம்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
 

.