This Article is From Feb 20, 2019

’28 வருட வலி, வேதனைங்க…!’- மகன் விடுதலைக்காக ஏங்கும் அற்புதம் அம்மாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர், கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர்.

’28 வருட வலி, வேதனைங்க…!’- மகன் விடுதலைக்காக ஏங்கும் அற்புதம் அம்மாள்

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி சென்ற ஆண்டு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஹைலைட்ஸ்

  • எழுவரும் 28 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர்
  • தமிழக அரசு, எழுவரையும் விடுதலை செய்ய ஒப்பதல் அளித்தது
  • அதற்கு ஆளுநர் சம்மதம் தெரிவிக்கவில்லை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர், கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். அவர்கள் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் தொடர்ந்து போராடி வருகிறார். அவர் தற்போது அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி சென்ற ஆண்டு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கையொப்பம் இட வேண்டும். அவரது கையொப்பத்துக்காக கடந்த 6 மாதங்களாக காத்திருக்கிறது ஏழு பேரின் விடுதலை. 

இப்படிப்பட்ட சூழலில், பொங்கலை அடுத்து அற்புதம் அம்மாள் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, எழுவர் விடுதலைக்காக ஆதரவு திரட்டி வருகிறார். இன்று அவர் சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

அப்போது, “கடந்த 28 ஆண்டுகளாக என் மகன் நிரபராதி என்று கூறி வருகிறேன். நான் முதலில் அதைச் சொல்லும்போது சிரித்தார்கள். ஆனால், வழக்கை விசாரித்த அதிகாரி தியாகராஜனே, என் மகன் நிரபராதி என்று உறுதியளித்தார். உச்ச நீதிமன்றமும் என் மகனுக்குச் சாதகமாகத்தான் கருத்து கூறியது. தமிழக அமைச்சரவையும், அரசும் எழுவர் விடுதலைக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளது. இருந்தபோதும், ஆளுநரின் ஒரு கையெழுத்தில் விடுதலை தடைபட்டுள்ளது. 

எனக்கு 71 வயதாகிறது. என் மகனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த அநீதி குறித்து நான் தமிழக மக்களிடம் எடுத்துக் கூற உள்ளேன். அவர்கள்தான் இனி இந்த விஷயம் குறித்து குரல் கொடுக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாக தற்போது வரை 15 மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். மாணவர்கள், வழக்கறிஞர்கள், சங்க மற்றும் அமைப்புத் தலைவர்களை சந்தித்து வருகிறேன். அனைவரது விருப்பமும் எழுவர் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான். 

இதை இன்னும் உரக்கச் சொல்லும் நோக்கில் வரும் மார்ச் 9 ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த உள்ளோம். இப்படியாவது ஆளுநர் விடுதலை குறித்து எண்ண வேண்டும். நான் இந்த விஷயத்தில் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. இப்போதும், ஆளுநர் ஒரு கையெழுத்திட்டு இந்த அனைத்து விஷயங்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கமாட்டாரா என்றுதான் ஏங்குகிறேன்” என்று உருக்கமாக பேசினார். 


 

.